2013-01-25 16:04:40

கர்தினால் டோப்போ : இந்தியக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டு


சன.25,2013. இந்திய மக்களும், கிறிஸ்தவர்களும் தங்களது விசுவாசத்தோடு ஒத்திணங்கும் வகையில் வாழ்ந்தார்கள் என்றால், அப்போது இந்தியா இந்த உலகுக்கே எடுத்துக்காட்டாக அமையும் என்று இந்திய ஆயர் பேரவையின் முன்னாள் தலைவர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ கூறினார்.
இந்தியாவில் இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் 64வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்த ராஞ்சி பேராயர் கர்தினால் டோப்போ, இந்தக் கொண்டாட்டங்கள் நம்பிக்கை ஆண்டுச் சூழலில் இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டினார்.
வன்முறை, ஊழல், பசி, ஊட்டச்சத்துக் குறைவு போன்ற நாட்டின் பிரச்சனைகளைக் களைவதற்கு இந்தியர்கள் காந்தியின் போதனைகளின் வழியில் செல்ல வேண்டும் எனவும், கிறிஸ்தவர்களில் மனமாற்றம் தேவையென்றும் கூறினார் கர்தினால் டோப்போ.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தலத்திருஅவைக்கு முக்கிய பங்கு உள்ளது, இது திருஅவையின் கடமையுமாகும் என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறிய கர்தினால் டோப்போ, வாய்மையே வெல்லும் என்ற நாட்டின் விருதுவாக்குச் சூழலில் உண்மையின் அழகை நாம் மீண்டும் கண்டுணர வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.