2013-01-25 15:58:17

கர்தினால் Glemp அவர்களின் நீதியில் பிறரன்பு வாழ்வை நினைவுகூர்ந்தார் - திருத்தந்தை


சன.25,2013. போலந்தின் வார்சா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Józef Glemp தனது வாழ்நாள் முழுவதும், “நீதியில் பிறரன்பு” என்ற தனது விருதுவாக்கின்படி வாழ்ந்தார் எனப் பாராட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
83 வயதாகும் கர்தினால் Glemp இறைவனடி சேர்ந்ததை முன்னிட்டு, வார்சாவின் இந்நாள் பேராயர் கர்தினால் Kazimierz Nycz அவர்களுக்கு இரங்கல் தந்தி அனுப்பிய திருத்தந்தை, கர்தினால் Glemp, புனித வளனைப் பின்பற்றி நீதியான மனிதராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போலந்து திருஅவையின் தலைவராக இருந்த கர்தினால் Glemp, அந்நாட்டின் கம்யூனிச அரசுக்கு எதிரான அமைதியான போராட்டத்தில் முக்கியமான கருவியாகச் செயல்பட்டவர். இவர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இம்மாதம் 23ம் தேதி மரணமடைந்தார்.
கர்தினால் Glempன் இறப்பையொட்டி, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான ஹங்கேரித் திருஅவைத் தலைவர் கர்தினால் Péter Erdőவும் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்தினால் Glempன் இறப்புக்குப் பின்னர், கத்தோலிக்கத் திருஅவையில் கர்தினால்களின் மொத்த எண்ணிக்கை 210. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 119.







All the contents on this site are copyrighted ©.