2013-01-24 15:45:21

திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி நம் ஒவ்வொருவரையும் ஆன்மீக ஆய்வுக்கு அழைக்கிறது - கர்தினால் பீட்டர் டர்க்சன்


சன.24,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டுக்கென வழங்கியுள்ள உலக அமைதி நாள் செய்தி நம் ஒவ்வொருவரையும் ஆன்மீக ஆய்வுக்கு அழைக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனித பூமியில் அமைதி நிலவ அனைத்துலகும் செபிக்கும் நாள் சனவரி 27, வருகிற ஞாயிறன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள அமைதி, மற்றும் நீதி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறியுள்ளார்.
புனித பூமியில் அமைதி நிலவ அனைத்துலகும் செபிக்கும் நாள் 2009ம் ஆண்டு ஒரு சில இளையோர் குழுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். அவ்வாண்டு 400 நகரங்கள் இணைந்து நடத்திய ஒரு நாள் செப முயற்சி, ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்து, இவ்வாண்டு ஐந்தாவது முறையாக, வருகிற ஞாயிறன்று உலகின் 3000 நகரங்களில் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதி நாளுக்கென சிறப்புச் செய்தி வழங்கியுள்ள கர்தினால் டர்க்சன், "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற தலைப்பில் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து, இறைவனோடும் ஒன்றித்து வாழும்போது உலகில் அமைதி நிலவும் என்பதை எடுத்துரைத்த கர்தினால் டர்க்சன், முழுமையான அமைதி கடவுளிடமிருந்து வருவதால், அக்கொடைக்கு நாம் ஒன்றிணைந்து வேண்டுவது முக்கியம் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.