2013-01-24 15:20:04

சன.25,2013. கற்றனைத்தூறும்..... அரசியலமைப்பு


அரசியலமைப்பு(constitution) என்பது, ஒரு நாட்டை நிர்வகிக்கும் அடிப்படைக் கொள்கைகளின் தொகுப்பாகும். இந்தக் கொள்கைகள், ஒரே தொகுப்பாக அல்லது சட்டரீதியான ஆவணங்களின் தொகுப்பாக எழுதப்படும்பொழுது இவை எழுதப்பட்ட அரசியலமைப்பு என்று சொல்லப்படுகின்றது. 1787ம் ஆண்டின் அரசியலமைப்பு மாநாட்டில் அரசுத்தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் கையெழுத்திட்டார். இவ்வுலகிலுள்ள இறையாண்மை கொண்ட நாடுகளின் எழுதப்பட்ட அரசியலமைப்பில், இந்தியாவின் அரசியலமைப்பு(Constitution of India) மிக நீளமானதாகும். எழுதப்பட்ட அரசியலமைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பே மிகச் சிறியதாகும். இந்திய அரசியலமைப்பில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 450 உட்பிரிவுகள் மற்றும் 1,17,369 சொற்கள் உள்ளன. ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஓர் அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் இது கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் 7 பிரிவுகளும், 27 மாற்றங்களும் உள்ளன. தொன்மை காலத்திலே, அரசு நிர்வாகம் சட்டங்களின் அடிப்படையில் இடம்பெற்றதற்கான சான்றுகளும் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. பாபிலோனின் சட்டங்கள் சூரியக் கடவுளிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன. கி.மு.2,300ல் சுமேரிய அரசர் Lagashன் Urukagina என்பவர், நீதி சார்ந்த விதிமுறைகளை வெளியிட்டிருந்தார் என்பது குறித்த சான்றுகளை, நவீன கால ஈராக்கில் புதைபொருள் ஆய்வு நடத்திய Ernest de Sarzec என்பவர் 1877ம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார். இந்த அரசரின் விதிமுறைகளின்படி கைம்பெண்களும் அநாதைகளும் வரிவிலக்குப் பெற்றிருந்தனர். ஏழைகள், செல்வந்தரின் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிய வருகிறது. அக்காலத்தில் பல அரசுகள், எழுதப்பட்ட சட்டங்களின்படி நிர்வாகம் செய்திருக்கின்றன. இந்தச் சட்டங்களில் Ur-Nammu (கி.மு.2050)ன் சட்டங்கள் பழமையானவை. சாதாரண சட்டத்துக்கும் அரசியல் அமைப்புக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முதலில் பிரித்தவர்களில் ஒருவராக அரிஸ்டாட்டில்(கி.மு.350) வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார். தங்களது அரசியலமைப்பை முதன்முதலில் முறையாக தொகுத்தவர்கள் உரோமையர்கள் எனவும் குறிப்புகள் கூறுகின்றன. இவர்கள் கி.மு.450ல் தங்களது அரசியலமைப்புச் சட்டங்களை 12 பிரிவுகளாக தொகுத்துள்ளனர்.
முழுமையடைந்த இந்திய அரசியலமைப்பு 1950ம் ஆண்டு சனவரி 26ம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.







All the contents on this site are copyrighted ©.