2013-01-24 15:41:17

47வது உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி


சன.24,2013. டிஜிட்டல் வழி தொடர்புகள் பெருகியுள்ள இக்காலத்தில், அத்தொடர்புகள் வழியாக நமது எண்ணங்களைப் பகிர்ந்து, நாம் உருவாக்கும் உறவுகளையும், சமுதாயக் குடும்பத்தையும் எண்ணிப்பார்க்க விழைகிறேன் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
இவ்வாண்டு மேமாதம் 12ம் தேதி கொண்டாடப்படும் 47வது உலகத் தொடர்பு நாளுக்கென, "சமுதாய வலைத்தளங்கள்: உண்மை மற்றும் நம்பிக்கையின் கதவுகளும், நற்செய்திப் பணியின் புதிய அரங்கங்களும்" என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியின் துவக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் தூய ஆவியார் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு உலகத் தொடர்புகள் நாள் திருஅவையால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கென திருத்தந்தை வழங்கும் செய்தி, செய்தியாளர்களின் பாதுகாவலாரான புனித பிரான்சிஸ் டிசேல்ஸ் அவர்களின் திருநாளான சனவரி 24ம் தேதி வெளியிடப்படும்.
2013ம் ஆண்டுக்கென வழங்கியுள்ள செய்தியில், சமுதாய வலைத்தளங்களின் வளர்ச்சியையும், அவை நமக்கு முன் வைக்கும் சவால்களையும் திருத்தந்தை ஆய்வு செய்துள்ளார்.
சமுதாய வலைத்தளங்கள் மூலம் நமது சிந்தனைகளை இன்னும் விரிவாக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும் என்று கூறும் திருத்தந்தை, உண்மையையும், நல்ல மதிப்பீடுகளையும் பகிர விழைவோருக்கு இத்தொடர்புகள் விடுக்கும் சவால்களையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தொடர்பு உலகை வளர்ப்பது சமுதாய வலைத்தளங்களின் முதன்மையான சவால் என்று கூறும் திருத்தந்தை, கணணித் தொடர்பு உலகில் இயேசுவையும், அவரது மதிப்பீடுகளையும் பகிர்ந்துகொள்வது கிறிஸ்தவர்களின் முன் உள்ள பெரும் சவால் என்று விளக்கியுள்ளார்.
கிறிஸ்தவ பாரம்பரியம் செறிவுள்ள பல அடையாளங்களை, தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தற்போது வளர்ந்துள்ள டிஜிட்டல் உலகிலும் கிறிஸ்துவ அடையாளங்களைப் பகிர்வது நமக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு சவால் என்று கூறியுள்ளார்.
சமுதாய வலைத்தளங்களின் அற்புதங்களைப் பயன்படுத்தி, அனைத்து மனிதர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கு உதவுவதும் இன்றைய அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
நற்செய்தியைப் பரப்பும் புதிய வழிகளை கிறிஸ்தவர்கள் அனைவரும் தொடர்ந்து தேடவும், அனைத்து வழிகளிலும் இறைவனின் அன்பையும், நன்னெறி விழுமியங்களையும் வளர்க்கும் கருவிகளாக நாம் மாறவும் தன் ஆசீரை அனைவருக்கும் வழங்கி தன் 47வது உலகத் தொடர்புகள் நாள் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.