2013-01-22 15:28:37

வியட்னாம் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலர், திருத்தந்தை சந்திப்பு


சன.22,2013. வியட்னாம் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலர் Nguyên Phu Trong, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அவர்களையும் சந்தித்தார் Nguyên Phu Trong.
வியட்னாம் கம்யூனிச அரசின் அதிகாரி ஒருவர், திருப்பீடத்துக்கு வருகை தருவது, 2007ம் ஆண்டிலிருந்து இது நான்காவது தடவையாகும்.
2009ம் ஆண்டில் வியட்னாம் அரசுத்தலைவர் Nguyen Minh Triet திருப்பீடத்துக்கு வருகை தந்துள்ளார்.
சாய்கான் ஆக்ரமிக்கப்பட்டதையடுத்து, 37 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்னாமுக்கும், திருப்பீடத்துக்கும் இடையேயான அரசியல் உறவுகள் முறிந்தன. எனினும், தற்போது இவ்விரு நாடுகளுக்கு இடையேயான நல் உறவுகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. பேராயர் Leopoldo Girelli, 2011ம் ஆண்டில் வியட்னாமுக்கானத் திருப்பீடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக, நாடுகளின் தலைவர்களை மட்டும் சந்திக்கும் திருத்தந்தை, ஒரு கட்சித் தலைவரை, அதுவும், திருப்பீடத்துடன் முழு அரசியல் உறவு இல்லாத ஒரு நாட்டின் அதிகாரியைச் சந்தித்திருப்பது முக்கியம் வாய்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.