2013-01-21 15:24:54

சன.22,2013 கற்றனைத்தூறும்..... மூக்குக்கண்ணாடி


சன.21,2013. கண்பார்வைக் குறைவுள்ளவர்கள் தெளிவாகப் பார்க்கவும், சுற்றுச்சூழல் தாக்கத்தினின்று கண்களைப் பாதுகாக்கவும், அழகுக்காகவும் மூக்குக்கண்ணாடி(spectacles) அணியப்படுகிறது. சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவைலட் ஒளிக்கதிர்கள் நேரடியாகக் கண்களைத் தாக்காதவாறு வெயில்காப்பு மூக்குக்கண்ணாடி(Sunglasses) அணியப்படுகின்றது. முதல் நூற்றாண்டிலேயே மூக்குக்கண்ணாடி பயன்படுத்தப்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பொருள்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு லென்ஸ்(கண்ணாடிவில்லை)களை எகிப்தியர்கள் கி.மு.5ம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கி.பி 54 முதல் கி.பி.68 வரை உரோமையப் பேரரசைஆட்சி செய்த நீரோவுக்கு ஆசிரியராக இருந்த செனெக்கா, தண்ணீரால் நிரம்பிய உருண்டை வடிவக் கண்ணாடி வழியாக, சிறிய மற்றும் தெளிவற்ற பொருள்கள் பெரியதாகவும் மிகத் தெளிவாகவும் தெரிகின்றன என எழுதியுள்ளார். மேலும், நீரோ பேரரசர், உரோமையக் காட்சியரங்குகளில் நடைபெற்ற விளையாட்டுக்களைத் தெளிவாகப் பார்ப்பதற்காக, மரகதப் பச்சைக்கல்லை, லென்ஸாகப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. பொருள்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு குவிலென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து 1021ம் ஆண்டில் வெளியான Alhazenனின் Book of Opticsல் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நூல், 12ம் நூற்றாண்டில் அராபிய மொழியிலிருந்து இலத்தீனுக்கு மொழி பெயர்க்கப்பட்டது, இந்நூலே, 13ம் நூற்றாண்டில் இத்தாலியர்கள் மூக்குக்கண்ணாடிகளைக் கண்டுபிடிப்பதற்கு உதவியது. வாசிப்பதற்கு உதவும் மூக்குக்கண்ணாடி முதன் முதலில் இத்தாலியில் 1290ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
மூக்குக்கண்ணாடியைப் பாதுகாக்க..... மூக்குக்கண்ணாடியை ஒருபோதும் கண்ணாடிப் பகுதி கீழ்ப்புறமாகப் படும்படி தரையில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் கீறல் விழுந்து பார்ப்பதற்குச் சிரமத்தைத் தரும். மேலும், கண்ணிலிருந்து கண்ணாடியை எடுக்கும்போது இரு கைகளால் அவிழ்த்து, அதேபோல் மடித்து அதன் கூட்டில் வைக்கவேண்டும். வாரம் ஒருமுறை சுத்தமான தண்ணீரில் கழுவி, தண்ணீரைத் தானாக வடிய விடவேண்டும். சுத்தம் செய்த பிறகு கண்ணாடிக்கூடிலுள்ள துணியால் மட்டும் துடைக்க வேண்டும். பிளாஸ்டிக் கண்ணாடியைவிட கிளாஸ் கண்ணாடிதான் பார்வைக்கு உகந்தது. கூலிங்கிளாஸ் நல்ல தரமானதாக வாங்கித்தான் அணிய வேண்டும்.
நல்ல பாம்பு படமெடுக்கும்போது அதன் விரித்த படத்தின் பின்புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும். இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை, மூக்குக்கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Spectacled cobra) என்பார்கள். ஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும். இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்றும் சொல்வார்கள்.







All the contents on this site are copyrighted ©.