2013-01-19 15:22:49

காப்டிக் கிறிஸ்தவர்களின் புதிய தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து


சன.19,2013. எகிப்தின் காப்டிக்ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் புதிய தலைவரான முதுபெரும் தலைவர் Ibrahim Isaac Sidrak அவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தொன்மைகால ஆன்மீக மற்றும் திருவழிபாட்டு மரபுகளைக் கொண்டிருக்கும் காப்டிக் திருஅவையின் விசுவாசிகளை வழிநடத்திச் செல்வதற்கும், அவர்களுக்கு இறைவார்த்தையை அறிவிப்பதற்கும் நம் ஆண்டவர் உதவுவாராக என்றும் திருத்தந்தை தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவரும், காப்டிக் திருஅவையின் முதுபெரும் தலைவருமான Ibrahim Isaac Sidrak அவர்களும் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.
எகிப்தின் கெய்ரோவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் காப்டிக்ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்கள், ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, எகிப்தில் 2005ம் ஆண்டில் 2,50,000மாக இருந்த காப்டிக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஏறக்குறைய 1,50,000மாகக் குறைந்துள்ளது.
எகிப்தின் காப்டிக்ரீதி கத்தோலிக்கத் திருஅவை, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையிலிருந்து பிரிந்ததாகும்.







All the contents on this site are copyrighted ©.