கிறிஸ்துவ ஒன்றிப்பை வளர்க்க பின்லாந்தில் எடுக்கப்படும் முயற்சிகளுக்குத் திருத்தந்தை
பாராட்டு
சன.17,2013. படைப்பின் துவக்கத்திலிருந்தே நம்மோடு பயணித்து வரும் இறைவன் நமது வாழ்வுப்
பாதையை அமைதியிலும், நீதியிலும், ஒற்றுமையிலும் வழிநடத்த நம்மில் ஒருவராக மாறியதை, நாம்
அண்மையில் கொண்டாடிய கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு நினைவுறுத்துகிறது என்று திருத்தந்தை
16ம் பெனடிக்ட் கூறினார். சனவரி 19, இச்சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் பின்லாந்து
நாட்டின் பாதுகாவலரான புனித Henry திருவிழாவையொட்டி அந்நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகள்
இவ்வியாழன் காலை திருத்தந்தையைச் சந்தித்தபோது, அவர் இவ்வாறு கூறினார். இவ்வெள்ளிக்
கிழமை முதல் கடைபிடிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் ஆரம்பத்தில் பின்லாந்து
பிரதிநிதிகளைச் சந்திப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டத் திருத்தந்தை, இந்த ஒன்றிப்பை
வளர்க்க செபம் ஒரு முக்கிய கருவியாக விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கிறிஸ்துவ
ஒன்றிப்பை வளர்க்க பின்லாந்தில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பாராட்டுவதாகக் கூறியத் திருத்தந்தை,
நன்னெறிகளுக்கு எதிராக இவ்வுலகம் விடுத்து வரும் சவால்களை நமது ஒற்றுமையின் மூலம் நாம்
சந்திக்க முடியும் என்று கூறினார்.