2013-01-17 15:59:37

Rimsha Masih குற்றமற்றவர் – பாகிஸ்தான் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு


சன.17,2013. Rimsha Masih என்ற சிறுமி குற்றமற்றவர் என்று பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தங்கள் நாட்டைப் பற்றிய நம்பிக்கையை வளர்த்துள்ளது என்று அந்நாட்டு அமைச்சர்களில் ஒருவரான Paul Bhatti கூறினார்.
திருக்குர்ஆன் விளக்க நூலின் பக்கங்களை எரித்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட மாற்றுத் திறனாளியான Rimsha Masihயை, நவம்பர் மாதம் இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் விடுதலை செய்தது.
இருப்பினும், Rimsha Masihயின் வழக்கை உச்சநீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, இப்புதனன்று இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் ஆரம்பமானது.
வழக்கு ஆரம்பித்த முதல் அமர்வின் முடிவிலேயே Rimsha Masih குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், இச்சிறுமியின் மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் மீது தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இச்சிறுமியின் வழக்கு நடைபெற்ற காலம் முழுவதும் பதட்ட நிலை நீடித்தாலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட பலரும் பாகிஸ்தானிலேயே தங்கியிருந்தது, இந்நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்று அமைச்சர் Paul Bhatti கூறினார்.








All the contents on this site are copyrighted ©.