2013-01-16 15:30:07

நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பற்றி பேராயர் Rino Fisichella


சன.16,2013. நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களில், திருஅவையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் உலகின் பல்வேறு மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்த நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்கள் முடிவுற்றிருக்கும் வேளையில், இந்நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பற்றி, புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் அறிவிக்கப்பட்ட முதல் நம்பிக்கை ஆண்டு, 1967ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1968ம் ஆண்டு ஜூன் மாதம் முடிய நடைபெற்றது என்றும், தற்போது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ள நம்பிக்கை ஆண்டை இரண்டாம் நம்பிக்கை ஆண்டு என்று அவரே குறிப்பிட்டுள்ளார் என்றும் பேராயர் Fisichella சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைபெறும் இரண்டாவது நம்பிக்கை ஆண்டில் புதிய நற்செய்திப் பணிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்றும், நற்செய்தியைப் புதிய வழிகளில் வழங்கும் ஒரு ஆரம்பமாக, Twitter வழியாக திருத்தந்தை குறுகியச் செய்திகளை அளித்து வருவது ஓர் எடுத்துகாட்டாக அமைந்துள்ளது என்றும் பேராயர் Fisichella தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.