2013-01-16 15:29:28

சன. 17. கற்றனைத்தூறும்...... காடுகள்


மரங்கள், செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நீர்நிலைகள, மலைகள் என அனைத்தும் இணைந்த அற்புத கட்டமைப்பே 'காடு' என்றழைக்கப்படுகிறது. தமிழில் வனம், கானகம்,அடவி, புறவு, பொதும்பு போன்ற பல சொற்களால் இது குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4 விழுக்காடு அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30 விழுக்காடு காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள் நிலப்பரப்பின் 50 விழுக்காடு வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகளவில் ஒரு நாளைக்கு 350 ச.கி.மீ., பரப்பளவு காடுகள் ஏதோவொரு காரணத்திற்காக அழிக்கப்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. வேளாண்மை தொடங்கிய காலத்திற்குப் பிறகே 40 விழுக்காடு காடுகள் அழிக்கப்பட்டன. அதிலும் கடந்த 200 ஆண்டுகளில் 75 விழுக்காடு காடுகள் வேளாண்மைக்காக அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியில் உள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளில் வாழ்கின்றன. காடுகள் தான் பறவைகள், விலங்குகள், பூச்சிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளன. காடுகள் பூவுலகின் நுரையீரல்கள் என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில், இவை, நமக்குத் தேவையற்ற கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கிக் கொண்டு நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிசனை நமக்களிக்கின்றன. இதை மனிதனால் செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. காடுகள் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. தென்னிந்தியாவில் பாயும் அனைத்து நதிகளும் ஏதாவது ஒரு காட்டில்தான் உருவெடுக்கின்றன. நகரமும், நகர மக்களும் நலமாக வாழ, காடுகளே ஆதாரப் புள்ளியாக உள்ளன.
ஒரு நாட்டின் வளத்திற்கு 33 விழுக்காடு நிலப்பரப்புக் காடுகள் தேவை. ஆனால், இந்தியாவில் 22 விழுக்காடு மட்டுமே காடுகள் வளம் உள்ளது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 6,78,333 ச.கி.மீ., மட்டுமே காடுகள் உள்ளன. இதில் தமிழகம் தன் மொத்த நிலப்பரப்பான 1,30,058 ச.கி.மீட்டரில், 23,643 ச.கி.மீ., சுற்றளவு வனப்பகுதியை மட்டுமே பெற்று இந்திய அளவில் 14வது இடத்தில் உள்ளது.
காடுகளில் பல வகைகள் உண்டு.
உலகின் காடுகளை 26 முதன்மை வகைகளாக பிரித்து, அவைகளை
6 பெரும் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம். அவை:
1. மிதவெப்ப ஊசியிலைக் காடுகள்,
2. மிதவெப்ப அகலிலை மற்றும் கலப்பிலைக் காடுகள்,
3. வெப்பவலய ஈரக் காடுகள்,
4. வெப்பவலய வறண்ட காடுகள்,
5. அடர்த்தியற்ற காடுகளும் புற்றரைக் காடுகளும்,
6. வளர்ப்புக் காடுகள்

(ஆதாரம் : பூவுலகின் நண்பர்கள்)








All the contents on this site are copyrighted ©.