2013-01-15 15:40:13

பிரான்சின் சாலைகளில் திருமணம் குறித்து எழுப்பப்பட்டுள்ள மக்களின் குரல்களுக்கு அரசியல் தலைவர்கள் செவிமடுக்க வேண்டும், தலத்திருஅவை


சன.15,2013. பிரான்சில் ஓரினச்சேர்க்கைத் திருமணங்களுக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் எழுப்பிய குரல்களுக்கு அரசியல் தலைவர்கள் செவிமடுக்க வேண்டுமென ப்ரெஞ்ச் ஆயர் பேரவை பேச்சாளர் பேரருள்திரு Bernard Podvin கூறினார்.
குடும்பம் என்றால் என்ன?, திருமணம் என்றால் என்ன?, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கின்றதா? என்பன போன்ற சமூகம் பற்றிய கேள்விகளை, ப்ரெஞ்ச் ஆயர்கள் எதிர்கொண்டு வருவதாக பேரருள்திரு Podvin மேலும் கூறினார்.
இத்தகைய விடயங்களுக்கானத் தீர்வை, தெருக்களில் நடத்தப்படும் பேரணிகள் முடிவு செய்ய வேண்டுமெனத் தான் கூறவில்லை, ஏனெனில் இது எப்போதும் ஆபத்தானது எனத் தெரிவித்த ப்ரெஞ்ச் ஆயர் பேரவை பேச்சாளர், இவ்விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கே பொறுப்பு உள்ளது என்று கூறினார்.
ஓரினச்சேர்க்கைத் திருமணங்களையும், அவ்வாறு திருமணம் செய்வோர் குழந்தைகளைத் தத்து எடுப்பதையும் சட்டப்படி அங்கீகரிப்பதற்கு ப்ரெஞ்ச் அரசு திட்டமிட்டு வருவது குறித்து மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
பிரான்சின் முப்பது குடும்ப அமைப்புக்களால் இஞ்ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில் எட்டு இலட்சம் பேர்வரை பங்கு கொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.