2013-01-15 15:38:54

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்திய ஆயர்கள்


சன.15,2013. இந்தியாவில் பெண் ஒருவர், வன்முறைக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு மீண்டும் உள்ளாகியிருப்பது, நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்று சொல்லி, அவ்வன்கொடுமை குறித்தத் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.
கடந்த டிசம்பரில் 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புதுடெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்துள்ளவேளை, பஞ்சாப் மாநிலத்தின் Amristarல் 29 வயதுப் பெண் ஒருவர் ஆறு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது குறித்து இந்திய ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருள்பணி Dominic D'Abreo, Fides செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இவ்விவகாரம் தொடர்பாக இந்திய ஆயர்களின் கருத்தைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மனிதரின் வாழ்வும் புனிதமானது என்றும், பெண்களின் மாண்பை அவமதிக்கும் இத்தகைய வன்செயல்களை நிறுத்துவதற்கு கல்வித்துறையில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அருள்பணி Dominic கூறினார்.
பாலியல் வன்கொடுமைச் செயல்கள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன என்றுரைத்த அக்குரு, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள், ஒவ்வொரு மனிதரும் மதிக்கப்பட வேண்டியவர், எனவே இத்தகைய செயல்கள் இடம்பெறவே கூடாது என்றும் கூறினார்.
மேலும், “பாலியல் சமத்துவத்துக்கான நீதி நாள்” இம்மாதம் 27ம் தேதியன்று மும்பை உயர்மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படவிருப்பதையும் குறிப்பிட்ட அருள்பணி Dominic, இந்தியர்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற இந்நாள் ஊக்கமளிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
பெண்கருக்கள் அழிப்பு, பெண் சிசுக்கொலை, வரதட்சணை இறப்புகள், பாலியல் வன்கொடுமை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், இம்மாதம் 27ம் தேதியன்று அனைத்துப் பங்குகளிலும் 3 கோடியே 70 இலட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Amristarல் 29 வயதுப் பெண் ஒருவர் பேருந்தில் தனியாகப் பயணம் செய்ததை அப்பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு, அப்பெண்ணின் கிராமத்தில் வண்டியை நிறுத்தாமல் ஒதுக்குப்புறமான வீடொன்றுக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று மேலும் ஐந்து பேரை அவ்விடத்துக்கு வரவழைத்து மாற்றி மாற்றி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.