2013-01-14 15:36:43

வாரம் ஓர் அலசல் – வாழ்வே பொங்கல்தான்


சன.14,2013 RealAudioMP3 பொங்குகபொங்கல், பொங்குகமகிழ்வென்றும், தங்குகஇன்பம் தமிழன் வாழ்வினில், மங்குகதீமைகள் பொங்குகவளமைகள், விஞ்சுகநலங்கள் மிஞ்சுகநன்மைகள், நீங்குககயமை நிலவுகவாய்மை, நல்குகவெற்றி நலிகதீதென்றும், நிறைகநிம்மதி நீடுகஆயுள், நிலமே செழித்து நீர்வளம் பெருகுக, எல்லா உயிர்களும் இன்புற்று வாழப் பொங்குகபொங்கல்! பொங்குகமகிழ்வென்றும்! (நன்றி கவிஞர் அ. கௌதமன், திருச்சி)
இப்படி இணையதளங்களிலும் மேடைகளிலும் வீடுகளிலும், பொங்கலோ பொங்கல் எனக் கவிபாடி பொங்கலைப் பொங்க வைத்திருக்கின்றோம். தைத் திருநாளாம் தமிழர் விழாவைச் சிறப்பித்திருக்கிறோம். புதுப்பானைகளில் வண்ணக் கோலமிட்டு, புத்தாடை உடுத்தி, களனிகளில் கால் அயர உழைத்து நமக்கு அன்னமிடும் காளைகளைக் குளிப்பாட்டி அவைகளுக்கும் நமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். என்ன கஷ்டங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்து இந்நாள்களில் நம் வீடுகளில் அனைவரின் வாழ்வும் பொங்கியது. இந்த வாழ்வு என்றென்றும் பொங்கட்டும்.
உலகில் பிறந்த அத்தனை மனிதரும் வாழவே விரும்புகிறார்கள். கடின நோயால், தீராத நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்கூட, டாக்டர், “என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்றுதான் நோயாளிகள் கெஞ்சுகிறார்கள். “நான் பிழைத்துக் கொள்வேன்” என்று இரத்தப் புற்றுநோயால் அங்கம் அங்கமாய் இறந்து கொண்டிருந்த ஒரு நண்பர் கூறியதை அருகில் இருந்த கேட்டபோது எனது நெஞ்சு வெடித்துச் சிதறியது. இதேபோல், சென்னையில், தனியார் மருத்துவமனை ஒன்றில், உயிர் காக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில், எந்த அசைவும் இல்லாமல் உடல் முழுவதும் கட்டுகளோடு கிடக்கும் 23 வயது இளம்பெண் வினோதினி சொன்ன சொற்களும் ஒட்டுமொத்தக் குடும்பத்தையே துடிக்க வைத்துள்ளது. "டாடி.. என்னை எப்படியாச்சும் காப்பாத்திருங்க!" என்று வினோதினி கேட்டதைச் சொல்லி அழுகிறார் அவரின் தந்தை. வினோதினியை ஒருதலையாகக் காதலித்த ஒருவர் வீசிய அரை லிட்டர் அமிலத்தால், கண், காது, இடுப்பு, கை, கால் என எல்லாமே உருக்குலைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சமயத்தில் இங்கு, தமிழகத்தில் வினோதினிக்கு இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. எதிர்காலம் குறித்த கனவுகளோடு, மனம் முழுக்க உற்சாகத்தோடு, கிராமத்திலிருந்து சென்னைக்குக் கல்லூரிப் படிப்புக்காக வந்த கெட்டிக்காரப் பெண் வினோதினி. ஓவிய மற்றும் கவிதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றிருப்பவர். தனது நிலையைப் பார்த்து அழும் ஏழைத் தந்தையின் விம்மல் சத்தம் கேட்டுச் சலனமுறும் வினோதினி, ''டாடி...அழாதீங்க. என்னை எப்படியாச்சும் காப்பாத்திருங்க. என் உடம்புல உயிர்மட்டும் இருந்தாக்கூடப் போதும். ஏதாச்சும் வேலை பார்த்து, உங்களை நான் பார்த்துக்கிறேன். என்னைக் காப்பாத்திருங்க டாடி... ப்ளீஸ்!'' என மயக்க நிலையிலும் புலம்புகிறார் என வார இதழ் ஒன்றில் வாசித்தோம்.
மனிதா! வாழ்க்கை மகத்தானது. அதை வாழ்வதற்குத்தான் அனைவரும் விரும்புகின்றனர். எனவே சக மனிதரை வாழவிடு. மற்றவரின் வாழ்வில் அவர்களின் அனுமதியின்றி நுழையாதே. நீ பிறரின் வாழ்வை உனது அகம்பாவத்தால் அழிப்பதன் மூலம் நீ உன்னையே அழிக்கின்றாய். நீ பிறரின் வாழ்வை அமிலத்தால் பொசுக்குவதன் மூலம், உனது வாழ்வை சாம்பலாக்குகிறாய். நீ வீசிய அமிலத்தால் உருக்குலைந்து கிடக்கும் அந்த இளம்பெண்ணை நேரில் பார்த்தாயா? நீ உனது வெறித்தனத்தால் சிறைக்கம்பிகளுக்குள் உன்னை முடக்கும்பொழுது, உன்னை நம்பியிருக்கும் உனது குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறாயா? “மனிதா! உன் கண்ணில் ஊர்ந்து கொண்டிருக்கும் அனல் பொறிக்கும் காமவெறியை கழற்றிப்போடு. உன் உள்ளங்கையில் ஊர்ந்து கொண்டிருக்கும் ஊழல் அழுக்கை உரித்துப்போடு. உன் தீய எண்ணங்களை திரட்டிப் போடு. இவற்றையெல்லாம் சேர்த்து புதிய தீர்மானங்கள் எடுத்து, உன் இதயத்துக்குள் “தீ” வை. அதுதான் உனக்குப் ‘போகி’ப் பொங்கல்”.
வாழ்க்கையே ஒரு பொங்கல்தான். இனவெறியால், பணவெறியால், மதவெறியால், பழகியவர்களும் பகைவர்களாகப் பாதை மாறுவதைக் காணும்போது, பாசங்களெல்லாம் வேஷப் பொங்கலாய் மாற்றம் பெறுகின்றன. ஆனால் பாசத்தையெல்லாம் பாசப்பொங்கலாய் மாற்றியிருக்கிறான் கானடா நாட்டு 12 வயது வீரச்சிறுவன் Nicholas de Jean. டொரொண்ட்டோவில் தனது அறையில் தீப் பிடித்ததைப் பார்த்ததும் தன் தந்தையிடம் தெரிவித்து விட்டு, உள்ளே ஓடி, தீக்குள் புகுந்து, தனது 6 வயது தம்பி வின்செண்ட்டைத் தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றியிருக்கிறான் de Jean. அவனது 4 வயது தங்கை ஏஞ்சலினாவை ஒரு கையிலும், 3 வயது செல்சியாவை மறுகையிலும் தூக்கிக் கொண்டு வந்து அவனது தந்தை காப்பாற்றியிருக்கிறார். டொரொண்ட்டோவின் தீயணைப்புப் படைவீரர்கள் கழகமும், காவல்துறை அதிகாரியும் de Jeanஐப் உண்மையான வீரன் என்று பாராட்டியுள்ளனர். அவனது குடும்பத்துக்கு 500 டாலர் காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பை நிறைய பொம்மைகளும் வழங்கப்பட்டுள்ளன.
வாழ்க்கையே ஒரு பொங்கல்தான், வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம்தான் என்பதைச் சிலர் தம் வாழ்வுச் செயல்களால் நிரூபித்து வருகிறார்கள். இதற்கு, மதுரையில் Little Diamond பள்ளியில் 9ம் வகுப்புப் படிக்கும் 14 வயது N. Sangeetha ஒரு சான்று. சிலம்பத்தில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தபோது கிடைத்த ரொக்கப் பரிசை மதுரை, திருநகரில் இருக்கும் பாலர் ஆதரவற்றோர் இல்லத்துக்குக் கொடுத்து இருக்கிறார் சங்கீதா. அந்த இல்லத்துப் சிறுவர், சிறுமிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த சங்கீதா, பள்ளிநேரம் போக மீதி நேரங்களில் அவர்களுக்கு, வர்ணம் தீட்டுதல், கைவினைப்பொருள்கள் செய்தல் எனப் பல கைத்தொழில்களைச் சொல்லிக் கொடுத்து வருகிறார். அந்தப் பொருள்களைப் பொது மக்களிடம் விற்றதிலிருந்து கிடைத்த பத்தாயிரம் ரூபாயை மதுரை ஆட்சியாளர் Anshul Mishraடம் கொடுத்து இருக்கிறார். அதை வைத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவுக்கு வேண்டிய மேசை, நாற்காலிகள், கட்டில்கள் போன்றவற்றை வாங்கவிருப்பதாக Mishra சொல்லியிருப்பதை, கடந்த டிசம்பரில் The Hindu தினத்தாள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் சிறுமி சங்கீதா, தான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதோடு, அந்த ஆதரவற்றோர் இல்லத்துச் சிறுவர் சிறுமியர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார். இப்பொழுதெல்லாம் அந்தச் சிறார் ஆளுக்கு ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி, புதிது புதிதாக எதையாவது வரைந்து பழகிக்கொண்டே இருப்பதாக அச்சிறாரே சொல்லியிருக்கிறார்கள்.
ஏழையின் வீட்டில் எரிகின்ற வயிற்றில் ஏற்பட்டிருப்பது “பசிப் பொங்கல்”. ஏழையின் “சாராயக்குடி”யிலே கூழையும் அடகு வைக்கும் நிலையில் ஏற்பட்டிருப்பது “நிம்மதியில்லாதப் பொங்கல்”. இந்தப் பொங்கல் விழாவுக்கு வாழ்த்துச் செய்தி சொல்லியுள்ள, தமிழக அரசியல்வாதி ஒருவரும், போதையில் சிக்கியுள்ள தமிழகம் மீளும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொண்டல்கள் மழை தர மறுத்ததாலும், இயற்கையின் மடியை நாசப்படுத்தும் மனிதனின் அக்கிரமச் செயலால் மணற்பாங்குகள் சூறையிடப்பட்டு, நிலத்தடி நீர் வறண்டே போனதாலும், பயிர்கள் பருகும் பாலான தண்ணீர் அற்றுப் போனதாலும், விவசாயிகள் துன்பத்தில் துவண்டு, களிப்புடன் பொங்கலைக் கொண்டாட முடியாத அவலம் இங்கே எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அவலம் தமிழகத்தில் மட்டுமல்ல அன்பர்களே, கடும் சண்டை இடம்பெற்றுவரும் சிரியா நாட்டின் ஆறு இலட்சத்துக்கு அதிகமான அகதிகள் வாழ்விலும் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இந்தக் கடுங்குளிர்காலத்தில் உதவிக்காகக் காத்திருக்கின்றனர். ஆப்ரிக்காவின் ஜிம்பாபுவேயில் பருவமழை பொய்த்துப் போனதால், 15 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என WFP நிறுவனப் பேச்சாளர் David Orr கூறியிருக்கிறார். இலங்கையின் RealAudioMP3 தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அங்கு இடம்பெறுவது “நீதிக்கான பொங்கல்”.
வாழ்வே பொங்கல்தான். “நான் பிறந்தபோது இருந்த உலகம், நான் வளர்ந்த போது வேறாக இருக்கிறது. ஆனால் நான் சாகும்போது வேறாக இருக்கும்” என்று எண்ணுவோருக்கு, பொங்கல், “ஏக்கப்பொங்கலாக”த்தான் இருக்கும். ஏன், நாம் வாழும் பூமியின் அளவுடைய 1,700 கோடிக் கிரகங்கள் இந்த அண்டத்தில் இருக்கின்றன என்று கடந்த வாரத்தில் ஒரு செய்தி வெளியானது. சூரியனைப் போன்ற அளவு கொண்ட விண்மீன்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போன்ற எத்தனை செய்திகளை நம் வாழ்நாளில் இன்னும் அறியப் போகிறோமோ...
வாழ்வே பொங்கல்தான். ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து, எல்லாருக்கும் நல்லது செய்து, நல்லதையே நினைத்து, ஒழுக்கத்தோடும் ஒற்றுமையோடும் ஒளிமயத்தோடும் வாழும்போது அந்த வாழ்வு என்றும் பொங்கலாகத்தான் இருக்கும். பார்க்கும் பெண்களைத் தாயாக, சகோதரியாக, மகளாக மதித்து வாழும்போது அந்த வாழ்வும் பொங்கலாகவே இருக்கும். கடந்ததில் பாடம் கற்று, நிகழ்வதைக் கருவாக்கிப் புதியதைப் படைக்க அழைக்கிறது இந்தப் பொங்கல்! நமது வாழ்வை மானுட அன்பு என்ற தடயங்களால் பதிவு செய்ய அழைக்கிறது இந்தப் பொங்கல். நமது வாழ்க்கைச் சோலை, அன்பு என்ற நறுமணத்தால் மணக்கட்டும்! மணம் பரப்பட்டும். அப்போது நமது வாழ்வு என்றென்றும் பொங்கல்தான்.








All the contents on this site are copyrighted ©.