2013-01-14 15:31:51

சன.15,2013 கற்றனைத்தூறும்... சீனப் பெருஞ் சுவர்


சீனப் பெருஞ் சுவர் என்பது, மங்கோலியர் போன்ற பல்வேறு இனக் குழுக்கள், பல்வேறு இராணுவ ஊடுருவல்கள் மற்றும் போர்க்குணம் கொண்ட பல்வேறு மக்களிடமிருந்து சீனப் பேரரசைக் காப்பாற்றுவதற்காக அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க வடக்கு எல்லைகளில், கிழக்கிலிருந்து மேற்காகக் கட்டப்பட்ட மதில் அரண் ஆகும். பல்வேறு அரசக் குலங்களால், பல்வேறு காலங்களில், கல்லாலும், மண்ணாலும், சரளைக் கற்களாலும், மரத்தாலும், பலதரப்பட்ட பொருள்களாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்ட இந்தச் சுவர்கள், பிற்காலத்தில் ஒரே சுவராக, இன்னும் உறுதியானதாக, பெரியதாக அமைக்கப்பட்டு பெருஞ்சுவர் என்ற பெயரைப் பெற்றது. இந்தச் சுவரின் மொத்த நீளம் 50 ஆயிரம் கிலோ மீட்டருக்குமேல் எனச் சொல்லப்பட்டாலும், நவீனக் கணிப்புப்படி அதன் நீளம் 6,200 கிலோ மீட்டருக்குமேல் என்று தெரிய வருகிறது. இதில் பல சுவர்கள் கி.மு.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளன. எனினும், கி.மு.220க்கும் 206க்கும் இடைப்பட்ட காலத்தில் முதல் சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால்(Qin Shi Huang) கட்டப்பட்ட சுவரே பெரும் பெயருடன் விளங்குகிறது. இந்தச் சுவரின் சில பகுதிகள் இன்றும் உள்ளன. தற்போது காணப்படும் இந்தச் சுவரின் பெரும் பகுதிகள், பிற்காலத்தில் மிங் (Ming)குலத்தவர் காலத்தில் மீண்டும் சீரமைக்கப்பட்டன. மிங் குலத்தவரே அதிகச் சுவர்களைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் கட்டிய சுவர்கள் 8,850 கிலோ மீட்டர் நீளம் எனவும், 21,196 கிலோ மீட்டர் நீளம் எனவும் இருவேறு புதைபொருள் ஆய்வுகள் கூறுகின்றன. சுவர்க் கட்டுமான நுட்பங்கள் குறித்து ஏற்கனவே அறிந்திருந்த சீனர்கள், கி.மு.8ம் நூற்றாண்டுக்கும் 5ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், வசந்த காலம் மற்றும் இலையுதிர்க் காலங்களில் இந்தச் சுவர்களைக் கட்டியுள்ளனர். பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்ட இச்சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 முதல் 30 இலட்சம் மக்கள்வரை இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால் இந்தச் சீனப் பெருஞ்சுவர், "உலகின் மிக நீளமான மயானம்" என்றும் அழைக்கப்படுவதுண்டு. இக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் செல்லும் இடமாகவும் இவ்விடம் உள்ளது. இச்சுவர் "நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்" ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக, 1987ம் ஆண்டில் இது அறிவிக்கப்பட்டது. 1938ம் ஆண்டில், ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய "அதிசயங்களின் இரண்டாவது" என்ற நூலில், நிலவிலிருந்து பார்க்கக்கூடிய மனிதரால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு, சீனப் பெருஞ்சுவர் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.