2013-01-09 15:57:02

பெண்கள் மீது காட்டப்பட வேண்டிய மரியாதையை, தகுந்த பாலியல் கல்வி வழியாக புகட்ட வேண்டும் - இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர்


சன.09,2013. பாலியல் வன்கொடுமைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கு அமிலங்கள் மூலம் ஆண்மை இழக்கச் செய்தல் அல்லது மரணதண்டனை ஆகிய தண்டனைகள் வழங்குவது இக்கொடுமைக்குத் தீர்வாகாது என்று "Catholic Secular Forum" (CSF) எனப்படும் இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர் அமைப்பொன்று கூறியது.
இதே எண்ணங்களை வலியுறுத்தி, இந்திய காரித்தாஸ் அமைப்பும் இந்திய அரசு நியமித்துள்ள Verma குழுவுக்கு பதினோரு அம்சங்கள் அடங்கிய அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது.
மரணதண்டனை என்பது எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை என்பதே கத்தோலிக்கத் திருஅவையின் கொள்கை என்று கூறும் இவ்வமைப்புகள், பெண்கள் மீது காட்டப்பட வேண்டிய மரியாதையை தகுந்த பாலியல் கல்வி வழியாக புகட்ட முயற்சிகள் மேற்கொள்வது நீண்டகால தீர்வாக அமையும் என்று கூறியுள்ளன.
தற்போது கேரளாவில் உள்ள சீரோ மலபார் ரீதித் திருஅவை பயன்படுத்தும் கல்வி முறையை எடுத்துக்காட்டாகக் கூறி, இதையொத்த பாடத் திட்டத்தை மறைகல்வியோடு இணைத்து வழங்க இந்திய ஆயர் பேரவை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.