2013-01-09 15:55:54

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை - யாழ்ப்பாண ஆயர் சவுந்தரநாயகம்


சன.09,2013. இலங்கை அரசு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றுள்ளபோதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் குழுவிடம் எடுத்துரைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Christine Robichon தலைமையிலான குழுவினர் இப்புதனன்று யாழ்ப்பாண ஆயரையும், மாவட்டச் செயலரையும் சந்தித்து கலந்துரையாடியபோது, ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் இவ்வாறு கூறினார்.
தொழில் பிரச்சனைகள், மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு போன்றன இன்னமும் இழுபறி நிலையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டிய ஆயர் சவுந்தரநாயகம், தமிழ் மக்கள் இன்று தமக்குள்ள பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தீர்வுகளைத் தேடாமல், தமக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று கிடைப்பதையே அதிகம் எதிர்பார்க்கின்றனர் எனக் கூறினார்.
வடஇலங்கையில் இனங்களுக்கிடையே நிலவும் நல்லுறவு முழுமையாக ஏற்படவில்லை எனவும் அதனை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லையெனவும் ஆயர் சவுந்தரநாயகம் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.