2013-01-09 15:52:34

சன. 10. கற்றனைத்தூறும்...... வாயில் வாழும் நுண்கிருமிகள்


நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான நுண்கிருமிகள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள நுண்கிருமிகளின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது. நம்முடைய வாயில் உள்ள நுண்கிருமிகள் குடும்பமும் உலகின் வேறொரு பகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் நுண்கிருமிகள் குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் நுண்கிருமிகள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் நுண்கிருமிகளைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளைச் சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டு,. வாயில் வாழும் நுண்கிருமிகளிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் நுண்கிருமிகளிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.
நாம் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டும் என்பதற்கே இந்த ஆய்வு.
(ஆதாரம் : இணையத் தமிழ் உலகம்)








All the contents on this site are copyrighted ©.