2013-01-08 15:06:16

விவிலியத்
தேடல் – உவமைகள் ஓர் அறிமுகம் – பகுதி 1


RealAudioMP3 புத்தாண்டின் முதல் விவிலியத் தேடல் இது. ஒரு புதிய முயற்சியை நாம் இன்று துவக்குகிறோம். இன்றும், இனிவரும் விவிலியத்தேடல்களிலும் இயேசுவின் உவமைகளை நம் தேடலின் மையமாகக் கொள்வோம்.

உவமைகள், அழகானக் கதைகள். ஆழமான உண்மைகளை உருவகங்களின் உதவியுடன் சொல்லும் கதைகள். பொதுவாகவே, மனித வாழ்வில் கதைகளுக்குத் தனியொரு இடமுண்டு. குழந்தைப் பருவம் முதல் கதைகள் மீது நமக்குள்ள ஈர்ப்பை நாம் அறிவோம். அமைதிக்கான நொபெல் பரிசை (1986ம் ஆண்டு) வென்ற Elie Weisel என்பவர் எழுதியுள்ள The Gates of the Forest என்ற நூலின் முன்னுரையில் கதைகளுக்கு உள்ள சக்தியை இவ்வாறு கூறியுள்ளார்...
பால் ஷேம் டாவ் என்ற யூதகுரு தான் வாழ்ந்த காலத்தில், மக்களுக்கு ஆபத்து வருவதாக அவர் உணர்ந்தால், காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வார். அங்கு நெருப்பு மூட்டி, தியானம் செய்து, செபம் ஒன்றை சொல்வார். அற்புதம் நிகழும், ஆபத்து நீங்கும்.
அவருடைய சீடர் - மஜீத் மஸரீத். தன் குருவின் மறைவுக்குப் பின், மக்களுக்கு ஆபத்து வரும்போது அவரும் காட்டில் அதே இடத்திற்குச் செல்வார். "ஆண்டவனே, எனக்குத் தீ மூட்டத் தெரியாது, ஆனால், என் குரு சொன்ன செபம் எனக்குத் தெரியும்" என்று சொல்லியபின், அந்தச் செபத்தைச் சொல்வார். அற்புதம் நிகழும், ஆபத்து நீங்கும்.
அவருக்குப் பின் வந்த மோஷே லீப் சாசோவ் என்ற குரு, ஆபத்து வரும்போது, காட்டுக்குச் சென்று, "ஆண்டவனே, எனக்குத் தீ மூட்டவோ, செபம் சொல்லவோ தெரியாது. காட்டில் இந்த இடம் மட்டும் தெரியும். இது போதுமே" என்று கடவுளிடம் சொல்வார். அற்புதம் நிகழும், ஆபத்து நீங்கும்.
இறுதியாக வந்தவர் ரிஸின் இஸ்ராயேல். இவர் தன் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து கைகளில் முகம் புதைத்துக்கொண்டு, கடவுளை வேண்டுவார்: "எனக்குத் தீ மூட்டவோ, செபம் சொல்லவோ, காட்டில் இருந்த இடமோ தெரியாது. இந்தக் கதை மட்டும் தெரியும். இது போதுமென்று நினைக்கிறேன்" என்பார். அப்போதும்... அற்புதம் நிகழும், ஆபத்து நீங்கும்.

இக்கதையின் இறுதியில் Elie Weisel கூறியுள்ள வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டுபவை: "கடவுள் கதைகளை விரும்பியதால் மனிதரைப் படைத்தார்." கடவுள் கதைகளை விரும்பியதால் மனிதரைப் படைத்தார் எனில், படைப்பு ஒரு மாபெரும் வெற்றிதான். அவர் கதையாய்ப் படைத்த நாமும் கதைகளில் வல்லவர்கள். நமக்கு ஏற்படும் அனைத்து அனுபவங்களும் கதைகளாய் பிறக்கின்றன. துன்பத்தைக் கதையில் பூசி, கசப்பைக் குறைத்துக் கொள்கிறோம். இன்பத்தைக் கதைகளில் தோய்த்து, இறுதித் துளிவரை சுவைக்கிறோம்.

கடவுள் சொன்ன கதைகளாகிய நாம், நம் பங்குக்கு, கடவுளைப் பற்றிய கதைகளைச் சொல்கிறோம். உலகின் பல முக்கிய மதங்களில் கதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. மதங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு மனித அமைப்பிலும் கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. பின்வரும் நிகழ்வு இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
'KONY 2012' என்ற வீடியோ ஆவணப் படம் Jacob Acaye என்ற சிறுவன் பட்ட கொடூர அனுபவத்தைக் கதையாய்ச் சொல்கிறது. உகாண்டா நாட்டில் ஜோசப் கோனி (Joseph Kony) என்பவர் சிறுவர்களையும், சிறுமிகளையும் இரவோடிரவாகக் கடத்திச்சென்று அவர்களை LRA (Lord's Resistance Army) எனப்படும் இராணுவமாக உருவாக்கி வருகிறார்.
உகாண்டா, தெற்கு சூடான், காங்கோ குடியரசு ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர், சிறுமிகள் இவ்விதம் கடத்தப்படுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக 'KONY 2012' என்ற படம் வெளியானது.
இதுவரை இப்படம் 7 கோடிக்கும் அதிகமான மக்களை இணையதளம் வழியாகச் சென்று அடைந்துள்ளது. ஜோசப் கோனியைக் கைது செய்யும்படி பல வல்லரசு நாடுகளுக்கு விண்ணப்பங்கள் சென்ற வண்ணம் உள்ளன. வெறும் புள்ளிவிவரங்களைக் கூறும் ஒரு படமாகவோ, கோனி செய்துவரும் அட்டூழியங்களைப் பட்டியலிடும் ஒரு படமாகவோ இது அமைந்திருந்தால், கோனிக்கு எதிராக இவ்வளவு எதிர்ப்பு உருவாகியிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், Jacob என்ற 10 வயது சிறுவனின் கதையாக இது சொல்லப்பட்டிருப்பதால், ஒரு மாற்றத்தை உருவாக்க உலகளவில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. கதைகளுக்கு பெரும் சக்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது.

கதைகளுக்கு உள்ள சக்தியைச் சொல்வதற்கு இதோ மற்றொரு எடுத்துக்காட்டு. Jay O'Callahan என்பவர் கதை சொல்பவர். தானே கதைகளை உருவாக்கி, அதனை மேடையேறி நடித்துக் காட்டுபவர். உலகின் பல நாடுகளிலும், ஒலிம்பிக் போன்ற பல முக்கிய நிகழ்வுகளிலும் இவரது கதைசொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. “ஒரு நாடகத்தில் இடம்பெற வேண்டிய பலரையும் தன் ஒரே உடலில் உள்ளடக்கியவர் Jay O'Callahan” என்று ஊடகங்கள் இவரைப் புகழ்கின்றன.
இவர் 2009ம் ஆண்டு, 'விண்மீன்களில் இணைக்கப்பட்டு' (“Forged in the Stars”) என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினர். இக்கதையை எழுதச்சொல்லி இவர் பணிக்கப்பட்டார். யார் இவரிடம் இந்த வேண்டுகோளை வைத்தது? கேட்டால், ஆச்சரியமடைவோம். NASA என்றழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் இவரிடம் கதை எழுதச் சொன்னது. 2009ம் ஆண்டு NASA தனது 50ம் ஆண்டைக் கொண்டாடியது. இந்தப் பொன்விழாவையொட்டி, NASA ஆய்வாளர்கள் Jay O'Callahan இடம் தங்கள் மையத்தைப்பற்றி ஒரு கதை எழுதச் சொன்னார்கள்.
விண்வெளி ஆய்வு மையத்தின் 50ம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு ஒரு கதையா? அவர்கள் நினைத்திருந்தால், தங்கள் ஆய்வு மையத்தைப் பற்றிய ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை உருவாக்கியிருக்கலாம். அல்லது, ஒரு பெரும் கண்காட்சியை உருவாக்கி, அதை உலகெங்கும் எடுத்துச் சென்றிருக்கலாம். ஏன் ஒரு கதை? கதைகளுக்கு அவ்வளவு சக்தி உண்டு. தலைமுறை தலைமுறையாய் NASAவைப்பற்றி மக்கள் எண்ணிப்பார்க்க உதவியாக நிலைத்திருக்கக் கூடியது கதைகளே என்பதை அம்மையத்தின் இயக்குனர்கள் உணர்ந்திருந்ததால், Jay O'Callahanஇடம் தங்கள் மையத்தைப் பற்றி கதை எழுதச் சொன்னார்கள். ஆம்... மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு.

கதைகள் கேட்பது மனிதர்களின் அடிப்படை இயல்பு. இதனை ஒரு தேவை அல்லது, தாகம் என்று கூடச் சொல்லலாம். "கதை சொல்வது: விவிலியத்திலிருந்து" (Storytelling from the Bible) என்ற நூலை எழுதிய Janet Litherland என்பவர் கதைகளுக்குள்ள சக்தியைப் பற்றி இவ்விதம் கூறுகிறார்: "கதைகள் சக்திவாய்ந்தவை. அவை நம்மைக் கவர்ந்திழுக்கும், செயலாற்றத் தூண்டும்... நமக்கு மகிழ்வைத் தரும், கல்வி புகட்டும், சவால் விடும். வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள கதைகள் உதவி செய்யும். அவை நம் எண்ணங்களில் நீண்ட காலம் பதிந்துவிடும். எனவே, நீண்ட மறையுரைகளைக் காட்டிலும், ஒரு கதை பெரும் சக்தி படைத்தது. ஓர் உண்மையை எடுத்துச் சொல்ல விருப்பமா? கதையாய்ச் சொல்லுங்கள். இயேசு இவ்விதம் சொன்னார். தன் கதைகளை அவர் உவமைகள் என்று கூறினார்."

உண்மையைச் சொல்ல, உவமைகளைச் சொல்ல வேண்டும். நான்கு நற்செய்திகளிலும் இயேசு கூறிய போதனைகளை ஒன்றாகத் திரட்டினால், அவற்றில் ஏறத்தாழ பாதி அளவு கதைகள், உவமைகள் இருப்பதை உணரலாம். ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் ஒரு படி மேலேச் சென்று, இயேசு பேசியதெல்லாம் உவமைகள் வழியாகவே என்றும் கூறுவர். அவர்களது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் மத்தேயு, மாற்கு என்ற இரு நற்செய்திகளிலும் பின்வரும் பகுதி காணப்படுகிறது: (மத். 13: 34-35; மாற். 4: 33-34)
மத்தேயு நற்செய்தி 13: 34-35
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. 'நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

இயேசு ஏன் உவமைகளில் பேசினார்? பெரும் மதத் தலைவர்கள் ஏன் உவமைகளில் பேசினர்? உவமைகள் வழியாகச் சொல்லப்படும் உண்மைகளை உலகம் எளிதாக ஏற்றுக் கொள்ளும். இதுதான் முக்கிய காரணம். உண்மை நேரடியாக, வெளிப்படையாகத் தோன்றும்போது, அது நம்மை அச்சத்தில் ஆழ்த்தும். அதை வரவேற்க நாம் தயங்குவோம். அதே உண்மை ஓர் உவமையாக, கதையாக நம்மை அடையும்போது, உள்ளத்தில் ஆழமாய்ப் பதியும்... மாற்றங்களையும் உருவாக்கும். கதைகளுக்கு, உவமைகளுக்கு உள்ள சக்தியை, சிறப்பாக இயேசு ஏன் உவமைகளில் பேசினார் என்பதை அடுத்தவாரம் தொடர்ந்து சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.