2013-01-08 15:45:25

திருத்தந்தை : நல்ல சமாரியர் போன்று துன்புறுவோருக்கு உதவி செய்ய வேண்டும்


சன.08,2013. நாம் ஒவ்வொருவரும் பிறருக்கும், நமக்கு நெருக்கமானவர்களுக்கும் நல்ல சமாரியர்களாக வாழும்பொருட்டு நமது திருஅவைச் சமூகங்களில் பிறரன்புப் பணிகள் மேலும் அதிகமாக இடம்பெறுவதற்கு இந்த நம்பிக்கை ஆண்டு ஏற்ற காலமாக அமைகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 11ம் தேதி, லூர்து அன்னைத் திருவிழாவன்று சிறப்பிக்கப்படும் 21வது அனைத்துலக நோயாளர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, புனித லூக்கா நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள நல்ல சமாரியர் (லூக்.10,25-37) குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பல்வேறு திருஅவைத் தந்தையர்கள் நல்ல சமாரியரில் இயேசுவையே பார்த்தனர் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் செபத்தில் இறைவனோடு ஆழமான உறவு கொள்வதன் மூலம், நல்ல சமாரியர் போன்று, உடலிலும் உள்ளத்திலும் துன்புறுவோர்மீது அக்கறை காட்டுவதற்கான வலிமையைப் பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.
திருஅவை வரலாற்றில், நோயாளிகளுக்கு உதவிய எண்ணற்ற புனிதர்கள் குறித்துத் தான் குறிப்பிட விரும்புவதாகவும் சொல்லியுள்ள திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற கொல்கத்தா அன்னை தெரேசா, புனித திருமுகத் தெரஸ், புனித குழந்தை தெரஸ், தொழுநோயாளர்களுக்கென்று தனது வாழ்வை அர்ப்பணித்த Raoul Follereau போன்ற பலரது பெயர்களை 21வது அனைத்துலக நோயாளர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.