2013-01-08 16:03:40

இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து கானடா எச்சரிக்கை


சன.08,2013. இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நடவடிக்கைகளில் திருப்தியளிக்கக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டால், அந்நாட்டில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கானடா நாட்டுப் பிரதமர் Stephen Harper கலந்து கொள்ளமாட்டார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கானடாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கையில் நிருபர்களிடம் தெரிவித்த கானடா நாட்டு குடியேற்றதாரர் துறை அமைச்சர் Jason Kenney, இதனை இலங்கை அரசிடம் தெளிவுபடுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.
இலங்கையில் போருக்குப் பின்னரும்கூட மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் நீடிப்பதாக கானடா உணர்கிறது என அவர் தெரிவித்தார்.
"இலங்கையிலிருந்து மக்கள் ஆஸ்திரேலியா, கானடா போன்ற நாடுகளில் சென்று குடியேறும் ஆவலில் பெரும் பணம் செலவழித்து சட்டவிரோத ஆள்கடத்தல் கும்பல்களிடம் தொடர்ந்து சிக்குகிறார்கள் என்றால், அவர்களை அந்த நிலைக்குத் தள்ளுகின்ற ஓர் அரசியல் சூழல் இலங்கையில் நிலவத்தான் செய்கிறது என்பது தனக்குப் புரிகிறது" என்று கென்னடி குறிப்பிட்டுள்ளார்.
போர்க் காலத்தைவிட தற்போது இலங்கையிலிருந்து வெளிநாடுகள் சென்று சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் போர் நடந்த காலத்தில் சட்டவிரோத நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து வெளியேற முயன்றவர்களைவிட அதிகம்பேர் தற்போது அவ்வாறு வெளியேற முயற்சிக்கின்றனர் என்ற விவரம் தனக்குக் கவலையை ஏற்படுத்துகிறது என அமைச்சர் Jason Kenney தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.