2013-01-07 16:05:44

வாரம் ஓர் அலசல் – பணக்காரப் பிச்சைக்காரர்


சன.07,2013. எமது அன்புக்கினிய நண்பர்களே, 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு தொடங்கி ஏழு நாள்கள் கடந்து விட்டன. இந்தப் புதிய ஆண்டை நாம் ஒவ்வொருவரும் நமது வசதி வாய்ப்பு மற்றும் விருப்பத்திற்கேற்ப கொண்டாடியிருக்கின்றோம். ஒருசிலர் எந்தக் கொண்டாட்டங்களுமின்றி ஆண்டை அமைதியான முறையில் தொடங்கியிருக்கின்றோம். இன்னும் சிலர் அந்த நேரத்தில் செபவழிபாட்டில் கலந்து கொண்டு புதிய ஆண்டை ஆண்டவன் கரத்தில் அர்ப்பணித்திருக்கின்றோம். இந்த உரோமை மாநகரில் புதிய ஆண்டு பிறந்த அந்த நொடிப்பொழுதில் விதவிதமான பட்டாசுகள் படபடவென வெடித்தன. வண்ண வண்ண வான வேடிக்கைகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. அதேநேரம் sham-pain மதுபானப் பாட்டில்களும் டமார் டமார் என்ற சத்தத்துடன் திறக்கப்பட்டன. இந்தக் கொண்டாட்டங்களில் காயம்பட்டவர்களைச் சுமந்து கொண்டு மருத்துவ துரித வண்டிகளும் அந்த இரவில் அலறிக்கொண்டு மருத்துவமனைகளுக்குச் சென்றன. இப்படி இந்தப் புதிய நாளின் ஆரவாரங்கள் பலவிதமாக இருந்தன. ஆனால் இந்தியாவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், புதுமையான விதத்தில் 2013ம் புத்தாண்டைச் சிறப்பித்திருக்கிறார்.
தத்தா புகே (Datta Phuge) என்பவர் புனே அருகே உள்ள Pimpri-Chinchwad என்ற இடத்தை சேர்ந்தவர். 32 வயதாகும் தத்தா புகே, ஏற்கனவே 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில் தங்க நகைகளை அணிந்து வலம் வருகிறார். ஆயினும், இதுவரை யாருமே செய்யாத வகையில் தங்கச் சட்டை அணிந்து 2013ம் புத்தாண்டை கொண்டாட விரும்பினார். இதனால் 1.2 கோடி ரூபாய்ச் செலவில் 3.25 கிலோ தங்கத்தை உருக்கி, அதைச் சட்டையாக அணிந்து புத்தாண்டைக் கொண்டாடியிருக்கிறார். பதினைந்து பொற்கொல்லர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் என இரண்டு வாரங்கள் உழைத்து அந்தத் தங்கச் சட்டையை உருவாக்கியுள்ளனர். அதில், பொத்தான்கள் Swarovski செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் தங்கச் சட்டையாக இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது என்பதால் அந்தச் சட்டையில் ஆங்காங்கே தங்க மலர்களையும் வைத்துள்ளனர். இந்தச் சட்டையின் தற்போதைய விலை 1.27 கோடி ரூபாய். தங்கச் சட்டை தனது கனவுகளில் ஒன்று எனக் கூறியுள்ளார் தத்தா புகே.
Bloomberg நிறுவனம், நிகரச் சொத்து மதிப்பு அடிப்படையில் வெளியிட்ட, உலகின் 100 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 18வது இடத்தில் உள்ளார். 2011ம் ஆண்டில் 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, தற்போது 18வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவரது நிகரச் சொத்து 2,100 கோடி டாலரிலிருந்து 2,470 கோடி டாலராக உயர்ந்துள்ளதே இதற்குக் காரணம். ஆனால் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்திலே உள்ளார். அனைத்துலகத் தொலைத்தொடர்புத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் மெக்சிகோ நாட்டுத் தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம், பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது நிகரச் சொத்து மதிப்பு 7,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் உலகின் முன்னணி 100 பெரும் கோடீஸ்வரர்களின் நிகரச் சொத்து மதிப்பு 15 விழுக்காடு அதிகரித்து 1.81 இலட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
ஜப்பானில் உள்ள புகழ் பெற்ற சுகிஜி (Tsukiji) மீன் சந்தையில் இந்த 2013ம் ஆண்டுக்கான முதலாவது மீனாக, bluefin tuna வகை சூறை மீன் ஒன்று இச்சனிக்கிழமையன்று ஏலத்திற்கு விடப்பட்டது. 222 கிலோ எடையுள்ள அந்த மீன் 155.4 மில்லியன் யென்னுக்கு அதாவது ஏறக்குறைய 9 கோடியே 72 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மியான்மாரில், கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று, அந்நாட்டுச் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ நெய்த ஒரு ஸ்வெட்டர், 27 இலட்சத்து 39 ஆயிரத்து 890 ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் அமெரிக்கப் பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் கையுறை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
அன்பர்களே, இதே பணம் ஏற்படுத்திய சிக்கல், திருவெற்றியூரில் தனது நான்கரை வயதுப் பிள்ளையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு தாயை விற்க வைத்துள்ளது. தான் விற்ற பிள்ளை தனக்கு மீண்டும் வேண்டும் என, பத்து மாதங்கள் கழித்துக் கேட்கும் அந்தத் தாயை வேண்டாம் என, முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி விட்டாள் அந்தச் சிறும RealAudioMP3 ி. பிரேசிலில் 18 வயது இளம் பெண் ஒருவர், தனது தாயின் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தனது கற்பை ஏலம் விட்டுள்ள விசித்திர சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிகளை வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் மனிதர் மத்தியில், ஆயிரங்களுக்காகத் தனது மானத்தையே இழக்கத் தயாராகும் மனிதரும் வாழ்கின்றனர். பணம் பற்றிய இத்தகைய, ஏற்ற இறக்கச் செய்திகளை வாசித்தபோது ஒரு கருத்து நமது எண்ணத்தில் எழுந்தது. வாழ்க்கைக்குப் பணம் தேவை. இதில் மாற்றுக் கருத்தே இல்லை. பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை ஏறக்குறைய எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் எப்படிப் பணக்காரர் ஆவது என்பதுதான் எல்லாருக்கும் தெரிவதில்லை. சிலருக்கே அது சாத்தியமாகிறது. நூலாசிரியர் சுகி.சிவம் சொல்வது போல, பணம் நிறைய வைத்திருப்பவர் எல்லாரும் பணக்காரர் என்பது பிழையான கருத்து. பொதுவாக, பணக்காரர்கள் எப்போதும் பணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது வீட்டைக் காவலர்கள் இரவும் பகலும் எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். தங்களிடம் இருக்கிற பணம் போய்விடுமோ, மீண்டும் பணத்தைச் சேர்க்க முடியாதோ என்று பணக்காரர்கள் பணத்தைப் பெரிதாக நினைத்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி நினைப்பவர்கள் நிச்சயமாக ஏழைகள், தரித்திரர்கள். பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல என்ற மனோநிலையில் உள்ளவரே உண்மையான பணக்காரர்.
மகாகவி பாரதியார் கடையத்தில் வாழ்ந்த போது அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், பாரதியாரின் ஏழ்மைநிலை கண்டு ஒரு பத்து முழம் வேட்டியும் ஓர் ஆறு முழம் துண்டும் கொடுத்து உடுத்தச் சொன்னார். அவற்றை ஆசையோடு வாங்கி உடுத்திக் கொண்டு வெளியே சென்ற பாரதியார், குளிரில் நடுங்கியபடி போர்த்திக் கொள்ளத் துணியின்றி இருந்த ஒரு பிச்சைக்கார மனிதரைப் பார்த்தார். உடனே தனது புதிய துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக் கொண்டு, தான் உடுத்தியிருந்த வேட்டியால் அந்த ஏழையைப் போர்த்தி விட்டார். கம்பீரத்துடன் வீடு திரும்பிய பாரதியாரைப் பார்த்த அந்த உரிமையாளர் அதிர்ந்து போனார். பாரதியார் நடந்ததைச் சொன்னார். அப்போது அந்த உரிமையாளர், நீவீர் அந்த ஏழைக்குத் துண்டைக் கொடுத்திருக்கலாமே என்று கேட்டதற்குப் பாரதியார், வெளியில் இருக்கும் அந்த ஏழைக்கு அதிகம் குளிரும். எனக்கென்ன, நான் வீட்டில்தானே இருக்கிறேன் என்றார். பின்னர் அந்த உரிமையாளர் பாரதியாருக்கு இன்னொரு வேட்டியைக் கொண்டு வந்து கொடுத்து, இதனை உடுத்திக் கொள்ளும் என்றார். உற்சாகமாக அதனை உடுத்திக் கொண்டே பாரதியார் சொன்னார் – கொடுக்கக் கொடுக்கத் தானய்யா வரும். பாரும். நான் ஒன்றைக் கொடுத்த உடனே கடவுள் இன்னொன்றைக் கொடுக்கின்றார் என்று.
பணமும் அப்படித்தான். கொடுக்கக் கொடுக்கத்தான் சேரும். இறைக்கப்படும் கிணறு போல. கிணற்றில் தண்ணீரை இறைக்காமல் விட்டுவிட்டால் நாள்கள் செல்லச் செல்ல அந்தத் தண்ணீரில் பாசி மண்டி நாற்றம் எடுக்கும். ஆனால் கிணற்றில் தண்ணீரை இறைத்துக் கொண்டே இருந்தால் புதுத் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும். தன்னிடம் இருப்பதை விடக்கூடாது என்று இறுகப் பிடித்திருக்கும் கஞ்சர் எப்போதுமே ஏழைதான். அவர் ஒருபோதும் செல்வந்தர் ஆகிவிட முடியாது. மேலும், வெளியேயிருந்து வீட்டுக்குள் வரும் காற்று மீண்டும் வெளியேறுவதற்காகவே வீடுகளில் நேருக்குநேர் சன்னல் வைக்கிறார்கள். வெளியேற வழி இருந்தால்தான் காற்று உள்ளேயே வரும். இந்த ஓட்டத்தில்தான் காற்றின் உயிரே இருக்கிறது. அதேபோல்தான் செல்வமும். செல்வத்தைச் செலவழிக்கத் தயாராக இல்லாதவர்க்கு அது வருகிற வழி அடைபட்டு விடும். எனவே அன்பர்களே, ஒருவர் பணக்காரர் என்பதோ, ஏழை என்பதோ அவர்கள் வைத்திருக்கும் தொகையைப் பொருத்தது அல்ல, ஆனால் அவர்களின் மனநிலையைப் பொருத்தது.
பிறரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்ற எண்ணமே ஏழ்மையின் அடையாளம் என்கிறார் சுகி.சிவம். நாடாளும் மன்னருக்குக்கூட இத்தகைய மனநிலை இருக்கின்றது என்பதற்கு ஒரு கதை சொல்வார்கள். ஒருமுறை ஒரு ஞானி ஒரு மன்னரிடம் உதவி கேட்டுப் போனார். மன்னர் செபத்தில் இருக்கின்றார், ஆனால் ஞானி மட்டும் உள்ளே போகலாம் எனக் காவலகர்கள் அனுமதி அளித்தார்கள். உள்ளே சென்றார் ஞானி. அப்போது மன்னர், கடவுளே, என் தேவைகள் அதிகமாகிவிட்டன. அதனால் எனக்கு பொன்னும் பொருளும் நாடும் இன்னும் கொடும் எனச் செபித்துக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட ஞானி, மன்னரிடம் எதையும் கேட்காமல் உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறினார். மன்னர் ஞானியைப் பின்தொடர்ந்து சென்று, சுவாமி, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஞானி, எனக்கு எதுவுமே வேண்டாம். நீயே ஒரு பிச்சைக்காரன். உன்னிடம் நான் ஏன் கேட்க வேண்டும், நேரே கடவுளிடமே கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அன்பர்களே, இந்த உலகில் பணக்காரர்கள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல. தேவையில் இருப்பவர்க்குக் கொடுத்து வாழ்பவரே உண்மையான பணக்காரர்கள். மற்ற பணக்காரர்கள் எல்லாம் பிச்சைக்காரர்களே. ஆங் சான் சூ கீ நெய்த ஸ்வெட்டரை ஏலம் விட்டதால் கிடைத்த 27 இலட்சத்து 39 ஆயிரத்து 890 ரூபாய், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது நற்செய்தி.








All the contents on this site are copyrighted ©.