2013-01-07 15:31:39

திருப்பீடத்திற்கான பன்னாட்டு தூதர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு


சன.07,2013. மனிதனின் ஆன்மீக மற்றும் பொதுநலனுக்காக எவ்வாறு திருப்பீடம் அரசுகளுடன் இணைந்து செயலாற்றிவருகிறது என்பதன் அடையாளமாக ஐவரிகோஸ்ட் நாட்டில் அண்மையில் உயிரிழந்த திருப்பீடத்தூதர் பேராயர் அம்புரோஸ் மாட்தா அந்நாட்டில் பெற்றிருந்த உயர்மதிப்பு இருந்தது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் அரசியல் தூதர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து உரை வழங்கிய திருத்தந்தை, பல்வேறு நாடுகளில் திருப்பீடத்தின் பலன் தரும் ஒத்துழைப்புப் பணிகளின் சிறந்த எடுத்துக்காட்டாக, இந்தியரான திருப்பீடத்தூதர் பேராயர் மாட்தாவை முன்வைத்தார்.
உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் போர்நிறுத்தம் இடம்பெற்று பயன்தரும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுதல், இஸ்ரேயலர்களும், பாலஸ்தீனியர்களும் தங்களுக்குரிய தனிநாடுகளுடன் ஒத்திணங்கி வாழ்தல், ஈராக் நாடு ஒப்புரவின் பாதையில் நடைபோடுதல், லெபனனில் அமைதியின் வருங்காலத்தை கட்டியெழுப்புவதில் கிறிஸ்தவ சமூகம் பலனுள்ள சாட்சியாக விளங்குதல், வட ஆப்ரிக்கா, சஹாராவை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள், காங்கோ, நைஜீரியா, மாலி, மத்திய ஆப்ரிக்க குடியரசு போன்றவைகளில் அமைதியும் நிலையான தன்மையும் இடம்பெறுதலின் அவசியம் போன்ற அம்சங்களையும் தன் உரையில் வலியுறுத்தினார் பாப்பிறை.
கருக்கலைப்பை அனுமதிப்பது ஒழுக்கரீதி சட்டங்களுக்கு எதிரானது என்பதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை, உலகில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைகள் குறித்து தெளிவற்ற ஒரு கண்ணோட்டம் உருவாகி வருவது குறித்த கவலையையும் வெளியிட்டார். அமைதிக்கான பாதையில் கல்வியின் முக்கியத்துவத்தையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
எழைநாடுகளில் கல்வி நிலை வளர்வதற்கு உதவுவதன் மூலம் ஏழ்மையையும் நோய்களையும் ஒழிக்க பணக்கார நாடுகள் உதவமுடியும் எனவும் தெரிவித்தத் திருத்தந்தை, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியைக் கட்டியெழுப்புவது என்பது நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு அல்ல, மாறாக அது ஓர் அத்தியாவசியத் தேவை என்றார். பல்வேறு நாடுகளில் திருஅவை தன் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், அனாதைச்சிறார் இல்லங்கள் மூலம் ஆற்றிவரும் பணிகளையும், திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களிடம் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
உலகின் 179 நாடுகள் திருப்பீடத்துடன் முழு அரசியல் உறவைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.