2013-01-07 16:12:57

திருத்தந்தையின் பொதுக்கருத்து சனவரி


சன.06,2013. இந்த விசுவாச ஆண்டில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் பேருண்மை குறித்த தங்களது அறிவை ஆழப்படுத்தவும், கிறிஸ்து மீதான தங்களது விசுவாசம் எனும் கொடைக்கு மகிழ்ச்சியோடு சான்று பகரவும் நாம் அனைவரும் இந்தச் சனவரி மாதத்தில் செபிக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளார்.
கடவுளை நம்பாத ஒருவர், அண்மையில் கிறிஸ்தவராக மாறிய ஒருவரிடம், நீ கிறிஸ்தவராக மாறியிருக்கிறாயா என்று கேட்டதும், அவர் ஆம் என்றார். அப்படியென்றால் நீ அவரைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பாய். சரி, அவர் எந்த நாட்டில் பிறந்தார் என்று சொல் எனக் கேட்க, எனக்குத் தெரியாது என்றார் புதுக் கிறிஸ்தவர். சரி, அவர் எந்த வயதில் இறந்தார், எத்தனை மறையுரைகள் நிகழ்த்தியிருக்கிறார் என்று கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். எல்லாவற்றுக்கும் தெரியாது, தெரியாது என்று பதில் சொல்லிக் கொண்டே இருந்தார் புதுக் கிறிஸ்தவர். அதனால் அவர் புதுக் கிறிஸ்தவரிடம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கும் நீ அவரைப் பற்றிக் குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறாய் என்றார். அதற்குப் புதுக் கிறிஸ்தவர், நீங்கள் சொல்வது சரியே. நான் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ளாததற்கு வெட்கப்படுகிறேன். ஆனால் எனக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஒரு குடிகாரனாக இருந்தேன். கடனாளியாக இருந்தேன். என் குடும்பமே சிதறுண்டு போயிருந்தது. நான் வீட்டுக்கு வருவதைக் கண்டு எனது மனைவியும் பிள்ளைகளும் பயந்து ஒளிந்து கொண்டனர். ஆனால் இப்பொழுதோ குடியை விட்டுவிட்டேன். கடனை அடைத்துவிட்டேன். என் வருகைக்காக எனது மனைவியும் பிள்ளைகளும் காத்திருக்கின்றனர். இதையெல்லாம் கிறிஸ்துதான் எனக்குச் செய்தார். இந்த அளவுக்குக் கிறிஸ்துவைப் பற்றி எனக்குத் தெரியும் என்றார்.
பெயரளவில் கிறிஸ்தவராக இருப்பதைவிட சான்று பகரும் கிறிஸ்தவராக இருப்பது மேல். அந்த அளவுக்கு கிறிஸ்து மீதான விசுவாசம் ஒருவரது வாழ்க்கையை மாற்ற வேண்டும். மாற்றமில்லாத வாழ்வு அர்த்தமற்றது. எம்மதத்தவராய் இருந்தாலும் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் ஒவ்வொரு நாளும் இறைவன் தனது பேரன்பால் காத்து வழிநடத்தி வருகிறார். நமக்கு ஏற்படும் துன்பங்களையே நினைத்துப் பார்க்கும் நாம், இறைவன் நம் வாழ்வில் செய்துள்ள நன்மைகளையும் நினைத்துப் பார்த்தால் அவர்மீதான நம்பிக்கை, விசுவாசம் ஆழப்படும். இறைவா, எனது விசுவாசமின்மையை அகற்றியருளும், எனது விசுவாசத்தை அதிகரித்தருளும் என நாளும் செபிப்போம். திருத்தந்தை இப்புதன்கிழமை டிவிட்டரில் எழுதியிருப்பது போல, தங்கள் வாழ்க்கையை இறைவனிடம் முழுமையாய் அர்ப்பணித்தவர்கள் எல்லாவற்றிலும் மாற்றத்தைக் காண்பார்கள். எனவே அன்பு நெஞ்சங்களே, இந்த 2013ம் ஆண்டின் முதல் மாதத்தில் நாம் இறை நம்பிக்கையில் வளரச் செபிப்போம். இந்த விசுவாச ஆண்டில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பற்றிய தங்களது அறிவை ஆழப்படுத்தச் செபிப்போம். நோய், துன்பம், கடன், கவலை, சோதனை வேதனை போன்ற நேரங்கள் நமது கடவுள் நம்பிக்கையைப் புடமிட்டுப் பார்க்கலாம். அந்நேரங்களில் மனம் தளராது இறைவன் மீதான நம்பிக்கையை ஆழப்படுத்துவோம். அதற்கு இறைவனிடம் அருளை இறைஞ்சுவோம்.
இலங்கையின் கண்டி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெற்றுவரும் நமது அன்புள்ளம் செலின் சாந்தியின் கணவர் மிக்கேல் பெர்னான்ட் அவர்கள் விரைவில் நற்சுகம் பெறவும், அவரின் குடும்பத்துக்காவும் செபிப்போம்.
அடிக்கடி பாகுபாடுகளை எதிர்கொள்ளும் மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதி என்பது எகிப்து, இரான், ஈராக், சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டன், ஏமன், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், சைப்ரஸ், ஐக்கிய அரபுக் குடியரசு, ஓமன், துருக்கி, லெபனன் ஆகிய 17 நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் அடிக்கடி பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். இயேசு கிறிஸ்து பிறந்த இந்தப் பகுதியில், வன்முறையும் அதனால் பெருமளவில் கிறிஸ்தவர்கள் புலம் பெயர்வதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடந்த 2012ம் ஆண்டில் மத்திய கிழக்குப் பகுதியிலும் ஆப்ரிக்காவிலும் தீவிரவாத இசுலாமியர்களால் பெருமெண்ணிக்கையில் கொலைகள் நடத்தப்பட்டன. குண்டு வெடிப்புகளும், கைதுகளும், இசுலாமுக்கு கட்டாய மதமாற்றமும் இடம்பெற்றன மற்றும் ஆலயங்களும் மூடப்பட்டன என ஊடகங்கள் கூறியுள்ளன.
எகிப்தில் காப்டிக்ரீதி கிறிஸ்தவர்கள் 451ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது அவர்களின் எண்ணிக்கை எண்பது இலட்சம் வரை இருக்கின்றது. ஆயினும் ஆலயங்களுக்குத் தீ வைப்பு, கொலைகள் எனக் கடந்த பல ஆண்டுகளாக இக்கிறிஸ்தவர்கள் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எகிப்தில் தீவிரவாத இசுலாமியர்களின் வன்முறைகளால் ஒரு இலட்சம் கிறிஸ்தவர்கள்வரை அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் கிறிஸ்தவர்கள் தனியாகச் செபம் செய்வது, விவிலியத்தை வரவழைப்பது போன்றவை சட்டத்துக்கு எதிரானவை. தனித்து செபக்கூட்டம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு கிறிஸ்தவ ஆண்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஈராக்கில் ஒரு காலத்தில் 15 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2 இலட்சத்து 50 ஆயிரமாகக் குறைந்துள்ளது. மேலும், ஈராக்கிய கிறிஸ்தவர்கள் மரண பயத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிரியாவில் பத்து இலட்சம் கிறிஸ்தவர்கள் அசாத் ஆட்சியில் பயமின்றி வாழ்ந்து வந்தனர். ஆயினும், தற்போது அந்நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வரும் சண்டையில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜோர்டனிலுள்ள 2,50,000 சிரியா அகதிகளுக்குக் கத்தோலிக்கத் திருஅவை உதவி வருகிறது. இந்நிலை நீடித்தால் இந்த 2013ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 5 இலட்சமாக உயரும் என ஜோர்டன் காரித்தாஸ் இயக்குனர் வாயெல் சுலைமான் கூறியுள்ளார்.
2007ம் ஆண்டில் ஹாமாஸ் என்ற இசுலாமிய தீவிரவாத அமைப்பு வன்முறையில் காசாவைக் கைப்பற்றிய பின்னர் அங்கு வாழந்த கிறிஸ்தவர்களில் பாதிப்பேர் வெளியேறி விட்டனர். சிலுவைகளும் கிறிஸ்மஸ் அலங்காரங்களும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன. 1948ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை எருசலேமை ஜோர்டன் ஆக்ரமித்திருந்த காலத்தில் அந்நகர் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாதியாக, அதாவது 12,646 ஆகக் குறைந்தது. எனினும், தற்போதைய இஸ்ரேல் ஆட்சியில் அந்நகரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 1,54,000 ஆக உள்ளது. பொதுவாக, மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகின்றனர். இந்தக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ விசுவாசத்திற்குப் பிரமாணிக்கமாகவும் விடா உறுதியுடனும் வாழ்வதற்கு தூய ஆவியிடமிருந்து சக்தி பெறுமாறு செபிக்க வேண்டுமெனத் திருத்தந்தை கேட்டுள்ளார்.
அன்பு நேயர்களே, சண்டை, வன்முறைகள், பாகுபாடுகள், வறுமை, வெள்ளம், அரசியல் எனப் பல வழிகளில் துன்புறும் மக்களுக்காகச் செபிப்போம். பொறாமை, பழியுணர்வு, பகைமை, காழ்ப்புணர்வு, தீயசக்தியின் விளைவுகள், நோய்நோக்காடுகள் போன்றவைகளால் கஷ்டப்படும் மக்களுக்காவும் செபிப்போம். நம் நேயர் குடும்பத்தில் பலர் செபிக்கக் கேட்டுள்ளார்கள். எனவே இந்நேரத்தில் சிறிது நேரம் கண்களை மூடி உருக்கமாக மன்றாடுவோம். ஒவ்வொருவரும் உங்களது தனிப்பட்ட தேவைகளையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
எமக்காகப் பாலனாகப் பிறந்துள்ள இயேசுவே, எமக்கு இதுநாள்வரை எத்தனையோ நன்மைகளைச் செய்துள்ளீர். அதற்காக நன்றி சொல்கிறோம். அதேநேரம் எங்கள் கவலை, கண்ணீரைத் துடைத்தருளும். உம்மை நாடி வருபவர்கள் ஒருபோதும் வெறுங்கையோடு சென்றதில்லை என்பது எமக்குத் தெரியும். இந்த ஆண்டு முழுவதையும் உமது கரங்களில் அர்ப்பணிக்கின்றோம். எம்மை உமது திருக்கரங்களால் ஆசிர்வதித்து அரவணையும். ஆமென்.







All the contents on this site are copyrighted ©.