2013-01-07 15:41:20

திருத்தந்தை : திருக்காட்சி இயேசு கிறிஸ்துவின் உலகளாவியதன்மையைக் காட்டுகிறது


சன.07,2013. இயேசு கிறிஸ்து, அனைத்து மக்களின் பாதையை வழிநடத்தும் உலகின் ஒளி என்பதை, மூன்று கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவைப் பார்த்த நிகழ்வை நாம் சிறப்பிக்கும் திருக்காட்சித் திருவிழா நமக்குக் காட்டுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மரியாவின் விசுவாசம், புதிய உடன்படிக்கையின் மக்களாகிய, திருஅவையின் விசுவாசத்தின் முதல் கனியாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றது என்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த மக்களிடம் கூறினார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சித் திருவிழாவை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, புதிய உடன்படிக்கையின் மக்கள் தொடக்கத்திலிருந்தே உலகளாவியத் தன்மையைக் கொண்டிருந்தனர், இதனை இன்று கீழ்த்திசை ஞானிகளின் உருவத்தில் பார்க்கிறோம், இந்த ஞானிகள் விண்மீனின் ஒளி மற்றும் மறைநூல்களின் குறிப்புக்களைப் பின்தொடர்ந்து பெத்லகேம் சென்றவர்கள் என்றும் உரைத்தார்.
கன்னிமரியா, வளன், இடையர்கள் ஆகியோரின் விசுவாசத்தை கிறிஸ்மஸ் காட்டும் அதேவேளை, திருக்காட்சித் திருவிழா கீழ்த்திசை ஞானிகளின் விசுவாசத்தைக் காட்டுகிறது என்றும் கூறினார் அவர்.
கன்னிமரியா இஸ்ரேலின் கிளையாகவும், இறைவாக்கினர்கள் மெசியா குறித்து முன்னுரைத்த கூற்றையும் குறித்து நிற்கிறார், ஆனால், கீழ்த்திசை ஞானிகளோ, கடவுளின் அமைதி, நீதி, உண்மை மற்றும் சுதந்திரத்தின் ஆட்சியைத் தேடும் பாதைகளாகிய மக்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், மதங்கள் ஆகியவற்றை குறித்து நிற்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்துவின் ஒளி தெளிவாகவும் உறுதியானதாகவும் இருக்கின்றது, இது இந்த அண்டத்தின் மொழியை அமைக்கின்றது மற்றம் மறைநூல்களை அறிவுள்ளதாக்குகிறது. அதன்மூலம் ஞானிகள் போல அனைவரும் உண்மைக்குத் திறந்தவர்களாய் இருந்து, அதை ஏற்கவும், உலகின் மீட்பரைத் தியானிப்பதற்கு இணையவும் முடியும் எனவும் திருத்தந்தை மூவேளை செப உரையில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.