2013-01-07 16:07:36

கற்றனைத் தூறும் .... சூரியனில் கரும்புள்ளிகள்


சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் ஒழுங்கற்ற இருண்ட பகுதிகள்தான் அந்தக் கரும்புள்ளிகள். அமெரிக்க ஐக்கிய நாட்டு விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கண்டுபிடிப்பின்படி, அப்புள்ளிகள் 33 கிலோ மீட்டரிலிருந்து அதிகபட்சமாக பூமியைப் போல 20 மடங்கு வரையும் காணப்படுகின்றன. சூரியனின் வலுவான காந்தபுலத்தின் காரணமாக சூரியனின் ஒரு பகுதியிலிருந்து வெப்பம் மாற்றிவிடப்படுகின்றது. இதனாலேயே குளிர்ந்த கருமையான பகுதிகள் தோன்றுகின்றன. இவை ஒரு மணி நேரம் முதல், ஆறு மாதங்கள்வரை நீடித்திருக்கும். இந்தக் கரும்புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பில் நகரும்போது தனியாகவும் தெரியலாம் அல்லது குழுமமாகவும் தோன்றலாம். இந்தக் கரும்புள்ளிகள் மிகவும் வெப்பமானவை. ஆயினும் 5,000 டிகிரி வெப்பம் இருக்க வேண்டிய இடத்தில் 4,000 டிகிரி வெப்பம் காணப்படுகிறது. உண்மையில் சூரியனின் மற்ற பகுதிகள் ஒளியுடன் இருப்பதால், இந்தப் புள்ளிகள் இருண்டு காணப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மிகவும் ஒளிமயமான மின்விளக்கு முன்னர் மங்கலான மின்விளக்கை வைத்தால் மங்கலான மின்விளக்கு சற்று இருட்டாகத்தான் தெரியும். ஆனால், அந்த ஒளிமயமான மின்விளக்கை எடுத்து விட்டால் மங்கலான மின்விளக்கு ஒளிமயமாகத் தெரியும். அதுபோலத்தான சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் ஒழுங்கற்ற இருண்ட பகுதிகள், கரும்புள்ளிகளாகத் தோற்றமளிக்கின்றன. (EWOW இணையதளம்- படைப்பு எஸ்.சுதர்சன்)







All the contents on this site are copyrighted ©.