2013-01-07 15:47:47

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 60,000க்கும் அதிகமான மாணவர்கள் கல்விக்கூடங்களிலிருந்து இடையில் விலகியுள்ளனர்


சன.07,2013. உள்நாட்டுப் போருக்குப்பின் பின்னர் வட இலங்கையின் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2011ம் ஆண்டில் மட்டும் நாடளவில் ஒரு இலட்சத்து இருபத்தாறாயிரம் மாணவர்கள் கல்வியாண்டின் நடுவில் பள்ளிகளிலிருந்து விலகியிருப்பதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
38,321 மாணவர்கள் வடமாநிலக் கல்விக்கூடங்களில் இருந்தும், 24,614 மாணவர்கள் கிழக்கு மாநிலக் கல்விக்கூடங்களில் இருந்தும் இடையில் விலகியிருப்பதாக கல்வி அமைச்சகம் கூறுகிறது.
நாட்டில் இலவசக் கட்டாயக் கல்வி நடைமுறையில் இருக்கின்ற போதிலும், கல்விக்கூடங்களில் இடை நிலை வகுப்புகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகிச் செல்வது கவலைக்குரியது என சேவ் த சில்ரன் என்ற சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேனகா கல்யாணரத்ன தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வறுமை காரணமாகவே மாணவர்கள் கல்விக்கூடங்களிலிருந்து இடைவிலகிச் செல்வதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கல்விக்கூடங்களிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து 2012ம் ஆண்டில் மாணவர்களின் இடைவிலகல் எண்ணிக்கை குறையத் தொடங்கியதாகவும் கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.