பேராயர் மச்சாடோ : குடும்பங்களில் வாழ்வை மதிப்பது குறித்த கல்வி அவசியம்
சன.05,2013. குடும்பங்களில் வாழ்வை மதிப்பது குறித்த கல்வி அவசியம் என்று வட இந்தியாவின்
வசை ஆயர், பேராயர் ஃபீலிக்ஸ் அந்தோணி மச்சாடோ கூறினார். 23 வயது மருத்துவக் கல்லூரி
மாணவி டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகும், புத்தாண்டுக்கு முந்தைய இரவு
புதுடெல்லியில் 17 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதையொட்டி இவ்வாறு
கூறினார் பேராயர் மச்சாடோ. இந்தியக் குடும்பங்கள் உலகத் தாராளமயமாக்கல் கொள்கையின்
தாக்கத்தைக் கொண்டுள்ளன எனவும், இளையோர்க்கு மதிப்பீட்டு மற்றும் நன்னெறிக்கல்வி வழங்கப்படுவதில்லை
எனவும் பேராயர் மச்சாடோ குறை கூறினார். நுகர்வுத்தன்மை மற்றும் ஒழுக்கநெறிப் பிறழ்வை
நோக்கி உலகம் அதிகம் சென்று கொண்டிருக்கின்றது, இந்த விவகாரத்தில் குற்றம் செய்பவர்கள்
மட்டுமல்ல, பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்வைக் குறைத்து மதிப்படும் சமுதாயமும் குற்றம்
புரிகின்றது என்று கூறினார் பேராயர் மச்சாடோ.