2013-01-05 14:18:32

கற்றனைத்தூறும்... விண்மீன்களைப் பற்றி இன்னும்


விண்மீன்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளக்கூடிய இன்னும் சில தகவல்கள்:
விண்மீன்கள் எப்போதும் பல்வேறு வண்ணங்களில் மின்னுவதைப் போலவும், கண் சிமிட்டுவதைப் போலவும் தோன்றுகின்றன. இதற்குக் காரணம், நமது பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம். இந்தக் காற்று மண்டலத்தில் பல்வேறு அடர்த்தி அளவு கொண்ட பகுதிகள் இருப்பதால், இவை வழியாகப் பயணிக்கும் ஒளி, தன் நேர்கோட்டுப் பாதையிலிருந்து அவ்வப்போது சற்று விலகுகிறது. ஒளிக்கதிர் இவ்விதம் விலகி வந்து நம் கண்களை அடைவதால், விண்மீன்கள் பல்வேறு வண்ணங்களில் மின்னுவதுபோல் தோன்றுகின்றன. காற்று மண்டலத்தைத் தாண்டி நாம் சென்றால், விண்மீன்கள் மின்னாமல் ஒளிர்வதைக் காணலாம்.
எவ்விதக் கருவியின் உதவியும் இன்றி, நாம் இரவில் காணக்கூடிய ஆயிரக்கணக்கான விண்மீன்கள் அனைத்துமே நமது சூரியனைவிட கூடுதல் ஒளி கொண்டவை. அதனால்தான் அவை நம் நேரடிப் பார்வையில் தெரிகின்றன. நமக்குத் தெரிந்த Alpha Centauri என்ற விண்மீன் சூரியனைவிட 1.5 மடங்கு அதிகம் ஒளி கொண்டது. வேறு பல விண்மீன்கள் சூரியனைவிட 6 மடங்கு அதிகம் ஒளி கொண்டவை.
சிவப்பாக ஒளிரும் பொருள் அதிக வெப்பத்தில் இருப்பதாகவும், நீலமாக ஒளிரும் பொருள் குளிர்ந்திருப்பதாகவும் நாம் எண்ணுவது வழக்கம். விண்மீன்களைப் பொருத்தவரையில், இதன் தலைகீழ் பாடமே உண்மை. அதாவது, சிவப்பாக ஒளிரும் விண்மீன்களின் வெப்பநிலை குறைவாகவும், நீலமாக ஒளிரும் விண்மீன்களின் வெப்பநிலை மிக அதிகமாகவும் இருக்கும்.
விண்மீன்களைப்பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
(earthsky.org என்ற இணையதளத்தில் Larry Sessions என்பவர் தொகுத்துள்ள தகவல்களிலிருந்து...)








All the contents on this site are copyrighted ©.