2013-01-03 15:15:46

புத்தாண்டில் டாஸ்மாக் விற்பனை 2 நாளில் ரூ.185 கோடிக்கும் அதிகம்


சன.03,2013. புத்தாண்டு நாள் கொண்டாட்டத்தையொட்டி, தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் டிசம்பர் 31, மற்றும் சனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும், 185 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டை விட, 40 கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், 6,805 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆண்டுதோறும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாயை அதிகரிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில், தினமும் ஏறத்தாழ, 50 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களின்போது விற்பனை அதிகரிக்கும். கடந்த தீபாவளியின்போது, 370 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதி இரவு வரை, 95 கோடி ரூபாய்க்கும், புத்தாண்டு நாளன்று, 90 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாயின. புத்தாண்டுக்கு, 200 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 185 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது.
வரும் பொங்கல் விழாவுக்கு டாஸ்மாக் விற்பனை, 370 கோடி ரூபாய் முதல், 400 கோடி ரூபாய் வரை, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட, மதுபான தொழிற்சாலைகளுக்கும் கூடுதலாக மூலப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.