2013-01-02 15:41:49

பாலியல் வன்கொடுமையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறுபேரின் சார்பில் எந்த வழக்கறிஞரும் வாதாடப்போவதில்லை - புதுடில்லி வழக்கறிஞர்கள்


சன.02,2013. டிசம்பர் மாதத்தில் புது டில்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறுபேரின் சார்பில் எந்த வழக்கறிஞரும் வாதாடப்போவதில்லை என்று புது டில்லியின் அனைத்து வழக்கறிஞர்களும் முடிவெடுத்துள்ளனர்.
23 வயதான மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இக்குற்றம் பற்றிய 1000 பக்கங்கள் அடங்கிய விவரங்களை காவல்துறையினர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை இவ்வியாழனன்று ஆரம்பமாகும் நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரின் சார்பில் யாரும் வாதாடப் போவதில்லை என்று டில்லி வழக்கறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த வழக்கு விரைவில் முடிந்து குற்றவாளிகள் தகுந்த தண்டனை பெறவேண்டும் என்பதே இம்முடிவுக்குக் காரணம் என்று வழக்கறிஞர்கள் சார்பில் பேசிய Sanjay Kumar கூறினார்.
இக்கொடுமைகளுக்கு உள்ளான பெண், மருத்துவ சிகிச்சைகள் பலனின்றி டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்ததால், நாட்டின் பல்வேறு நகரங்களில் புத்தாண்டு விழாக்கள் நிறுத்தப்பட்டன.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து, புது டில்லியில் பெண்கள் புத்தாண்டு நாளன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்கொடுமைகளுக்குப் பலியான இளம்பெண்ணுக்கு இப்புதனன்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.