2013-01-01 15:18:04

திருத்தந்தை - மனிதர்கள் அடிப்படையில் அமைதியை விரும்புகிறவர்கள் என்பதை வெகுவாக நம்புகிறேன்


சன.01,2013. மனிதர்கள் அடிப்படையில் அமைதியை விரும்புகிறவர்கள் என்பதை, தான் வெகுவாக நம்புவதாலேயே, இவ்வாண்டுக்குரிய அமைதி நாளுக்கு "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற வார்த்தைகளைத் தன் அமைதிச் செய்தியின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்ததாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
2013ம் ஆண்டின் முதல் நாளன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் ஆடம்பரத் திருப்பலியை நிகழ்த்தியத் திருத்தந்தை, தன் மறையுரையின் துவக்கத்தில் இவ்வாறு கூறினார்.
வன்முறைகளை வளர்க்கும் போர்களமாகக் காட்சிதரும் இவ்வுலகில், ஏழைகள் செல்வந்தர்கள் இடையே உள்ள வேறுபாடுகள், சுயநலத்தின் ஆதிக்கம், கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் என்ற வேதனைக்குரிய போக்குகள் அதிகம் காணப்பட்டாலும், அமைதியை வளர்க்கும் முயற்சிகளும் பெருமளவில் வளர்ந்து வருவது ஆறுதலைத் தருகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
தூய கன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவையும், 46வது அகில உலக அமைதி நாளையும் சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை ஆற்றிய இத்திருப்பலியில், பல்வேறு நாட்டுத் தூதர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே, மற்றும் திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
நம்மை அரவணைத்துக் காக்கும் பெற்றோரைப் போல விளங்கும் இறைவனின் காணக்கூடிய வடிவமாக நம்மத்தியில் வாழ்ந்த இறைமகனின் முகத்தை ஆழ்ந்து தியானிப்பது அமைதியைப் பெறும் ஓர் உறுதியான வழி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அமைதியின் இளவரசரான இயேசுவை நாம் ஆழ்நிலை தியானத்தில் கண்டு, அமைதிபெற இறைவனின் தாயான மரியா நமக்கு உதவி புரிவாராக என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.







All the contents on this site are copyrighted ©.