2013-01-01 15:23:21

திருத்தந்தை - நன்மையே உறுதியாக வெல்லும் என்பதைச் சொல்வதே நம்பிக்கை ஆண்டில் நமது முக்கியப் பணி


சன.01,2013. உலகில் நன்மை இன்னும் அதிகமாய் உள்ளது, நன்மையே உறுதியாக வெல்லும் என்பதைச் சொல்வதே நம்பிக்கை ஆண்டில் நமது முக்கியப் பணி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாள் மாலையில், அவ்வாண்டில் இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறும் Te Deum நன்றி வழிபாட்டை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றுவது வழக்கம்.
2012ம் ஆண்டின் இறுதிநாளான இத்திங்கள் மாலை ஐந்துமணிக்கு திருத்தந்தை நிகழ்த்திய நன்றி வழிபாட்டில் மறையுரை ஆற்றியத் திருத்தந்தை, உலகில் நன்மைகள் பெருமளவில் நிகழ்ந்தாலும், தீய நிகழ்வுகளே ஊடகங்கள் வழியே நம் கவனத்தை அதிகம் கவர்கின்றன என்று கூறினார்.
செய்திகள் என்ற பெயரில் வன்முறைகளே நம்மை வந்தடைந்தாலும், நன்மையையும், அன்புச் சேவைகளும் இவ்வுலகில் பெருமளவில் பரவிக் கிடக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள அமைதியும், தியானமும் நமக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
சுயநலத்தையும், சந்தேகத்திற்குரிய நன்னெறி கொள்கைகளையும் பரப்பி வரும் உலகில் இளையோர் உண்மையைத் தேடுகின்றனர் என்பதை நாம் ஒவ்வொரு ஆண்டும் கண்டு வருகிறோம் என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, வருங்கால இளையோரை உருவாக்குவதில் பெற்றோர் வகிக்கும் முக்கியமான பொறுப்பையும் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையின் மறையுரைக்குப் பின், இறைவனுக்கு நன்றி கூறும் Te Deum பாடல் பாடப்பட்டது. வழிபாட்டின் இறுதியில், திருத்தந்தை, பேராலயத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்குத் திருநற்கருணை ஆசீர் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.