2012-12-29 15:15:20

சிரியாவில் இடைக்கால அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஐ.நா.பிரதிநிதி


டிச.29,2012. ஏறக்குறைய 21 மாதங்களாக இடம்பெற்று வரும் ஆயுதத் தாக்குதல்களால் சிதைவடைந்துள்ள சிரியாவில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும்வரை உருவாக்கப்படும் இடைக்கால அரசு முழு அதிகாரங்களுடன் செயல்படுவதற்கு வழிசெய்யப்படுமாறு ஐ.நா மற்றும் அரபு கூட்டமைப்பின் பிரதிநிதி Lakhdar Brahimi அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து தமஸ்குவில் நிருபர் கூட்டத்தில் பேசிய Brahimi, அனைத்துலக அமைதிகாப்புப் படையினரை அமர்த்துவது குறித்து சிந்திக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புரட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அந்நாட்டு அரசை இரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மாக்தாத்திடம் வலியுறுத்தியாக இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரெவ் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 30ம் தேதி ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, சிரியாவில் இடைக்கால அரசை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது.
ஆனால், அரசுத்தலைவர் பஷார் அல்-அசாத்தும், புரட்சியாளர்களும் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை.
இந்த நிலையில், அடுத்த மாதம் மாஸ்கோவில் அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின்போது, புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்று தெரிகிறது.







All the contents on this site are copyrighted ©.