2012-12-29 14:56:02

கர்தினால் கிரேசியஸ் : இளம்பெண்ணின் மரணம் இந்தியச் சமுதாயத்தில் தீவிர மாற்றம் இடம்பெறுவதற்கான அறைகூவல்


டிச.29,2012. இம்மாதம் 16ம் தேதி புதுடெல்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஆறு ஆண்களினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்ததற்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அம்மாணவியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
சிங்கப்பூரில் புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி இச்சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ், முழு இந்தியத் திருஅவையும் அந்த இளம் பெண்ணுக்காகச் செபிக்கின்றது மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்வு, இந்தியாவுக்கு வருத்தமான தருணம் எனவும், ஒரு சமுதாயம் தனது பெண்களை எவ்வாறு நடத்துகிறதோ அதுவே அதன் அறநெறி முன்னேற்றத்தின் அடையாளம் எனவும், இந்த இளம்பெண்ணின் மரணம் இந்தியச் சமுதாயத்தில் தீவிர மாற்றம் இடம்பெறுவதற்கான அழுகுரல் என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்.
இந்தப் பெண்ணின் இறப்புக்காக அழுவது, சமுதாயத்தில் மனித வாழ்வின் மதிப்புக்கு உறுதியான சான்றுகளாக வாழ்வதற்கு அனைத்துக் கத்தோலிக்கரையும் தூண்ட வேண்டுமெனவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.







All the contents on this site are copyrighted ©.