2012-12-29 14:53:20

அந்தியோக்கிய புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து


டிச.29,2012. மத்திய கிழக்குப்பகுதி, உறுதியற்ற நிலையிலும் எளிதில் வன்முறை இடம்பெறும் இடமாகவும் இருக்கும் இக்காலத்தில், கிறிஸ்துவின் சீடர்கள் தங்களுக்கிடையே நிலவும் ஒன்றிப்புக்கு உண்மையான சாட்சி பகர வேண்டியதன் உடனடித் தேவை அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வாறு சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலம், அன்பு, அமைதி, ஒப்புரவு ஆகிய நற்செய்தி அறிவிக்கும் செய்தியை உலகம் நம்பும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அந்தியோக்கியா மற்றும் அனைத்துக் கிழக்குப் பகுதிக்குமான புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் John X Yazigiக்கு கிறிஸ்துவின் அன்பில் சகோதரத்துவ வாழ்த்துச் சொல்லி அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
உரோமன் கத்தோலிக்கத் திருஅவைக்கும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே இருக்கும் ஒன்றிப்பு முழுமையடையாத நிலையில், இவ்விரு சபைகளும் தங்களுக்கு இடையேயான ஆன்மீக ஒன்றிப்பை மேலும் காணக்கூடிய விதத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கானப் பொறுப்புணர்வை இவ்விரு சபைகளும் கொண்டுள்ளன என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறைக்குப் பலியாகுவோரைக் கிறிஸ்து குணப்படுத்தவும், அமைதிக்கான செயல்கள் அப்பகுதியில் தூண்டப்படவும் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
92 வயதான கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Ignatius IV Hazim இம்மாதம் 5ம் தேதி இறந்ததையொட்டி அவ்விடம் தலைவரின்றி காலியாக இருந்தது. பெய்ரூட்டின் வடக்கேயுள்ள Balamand நமதன்னை துறவு இல்லத்தில் இம்மாதம் 17ம் தேதி கூடிய பேரவையில் அச்சபையின் புதிய முதுபெரும் தலைவர் John X Yazigi தேர்ந்தெடுக்கப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.