2012-12-28 10:53:00

2013ம் ஆண்டில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கும் முக்கிய நிகழ்வுகள்


டிச.28,2012. பிறக்கவிருக்கும் 2013ம் ஆண்டில் அனைத்துலக இளையோர் தினம் உட்பட பத்து முக்கிய நிகழ்வுகளில் திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அனைத்துலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் அவ்வாண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று எனக் கூறும் திருப்பீடம், இந்த இளையோர் தினக் கொண்டாட்டங்களில் ஏறக்குறைய இருபது இலட்சம் இளையோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
“நம்பிக்கை” குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புதிய அப்போஸ்தலிக்கத் திருமடல் வருகிற சனவரியில் வெளியிடப்படும் எனவும், இது அவரின் நான்காவது அப்போஸ்தலிக்கத் திருமடலாக அமையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடும் விதமாக, 2013ம் ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் எனவும், இதன் ஒரு கட்டமாக, பல்வேறு கத்தோலிக்கப் பொதுநிலை இயக்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களை, வருகிற மே 18ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை சந்திப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் 2ம் தேதியன்று இடம்பெறும் திருநற்கருணை ஆராதனை திருவழிபாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வார் என்றும், அச்சமயம் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் திருவழிபாடு இடம்பெறும் என்றும், இத்தகைய நிகழ்வு வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறவுள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மனித வாழ்வை, தாயின் கருவறை முதல் அது இயல்பான மரணம் அடையும்வரைப் பாதுகாக்கும் நோக்கத்தில், வாழ்வதற்கான உரிமை குறித்த உலக மாநாடு வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி வத்திக்கானில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 26, 27 தேதிகளில் அனைத்துலக குடும்ப மாநாடு உரோமையில் இடம்பெறும் என்றும், அன்றாட வாழ்வின் சவால்களைச் சந்திப்பதற்கு விசுவாசம் எந்த அளவுக்கு உதவும் என்பது பற்றிச் சிந்திக்கவும் இம்மாநாட்டில் திருத்தந்தை குடும்பங்களை அழைப்பார் என்றும் திருப்பீடம் கூறியுள்ளது.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று தொடங்கிய நம்பிக்கை ஆண்டு 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.