2012-12-27 15:13:37

வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள்


டிச.27,2012. முத்திபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் கூறிவந்துள்ள புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் விளங்கும் உண்மையான கிறிஸ்துவ வாழ்வு என்ற அடித்தளத்தில் எழுப்பப்படவேண்டும் என்று ஆசிய ஆயர்கள் கூறினர்.
டிசம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி முடிய வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர் பேரவைக் கூட்டத்தில் ஆயர்கள் நிறைவேற்றியத் தீர்மானங்களின் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு, ஆசிய ஆயர்கள் பேரவை துவக்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவு, கத்தோலிக்க மறைகல்வி வெளியிடப்பட்ட 20ம் ஆண்டு நிறைவு ஆகிய முப்பெரும் நிறைவுகளைக் கொண்டாடும் இவ்வாண்டில், பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டம் நடைபெறுவது சிறப்பான ஒரு நிகழ்வு என்று ஆயர்களின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.
பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டம் வியட்நாமில் நடைபெற்றதால், அங்குள்ள கத்தோலிக்கத் திருஅவை வெளிப்படுத்திவரும் விசுவாசம் தங்களுக்கு ஒரு பெரும் உந்துசக்தியாக உள்ளதென்று ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வறிக்கையில் காணப்படும் பத்து அம்சங்களில், இயேசு கிறிஸ்துவுடன் கொள்ளவேண்டிய தனிப்பட்ட உறவு, மறைபரப்புப் பணியில் காட்டும் ஆழ்ந்த ஆர்வம், ஏனைய மதங்களுடன் உரையாடல், தாழ்ச்சியில் ஆற்றப்படும் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களுடன் கொள்ளும் ஒற்றுமை, கடவுளின் படைப்பைப் பேணுதல் என்ற பல்வேறு கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.
உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினரை உள்ளடக்கிய ஆசிய நாடுகளில், கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் கொண்டு செல்வதற்குத் தேவையான எண்ணிக்கையில் நாம் இருப்பது இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடை என்று ஆயர்களின் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.








All the contents on this site are copyrighted ©.