2012-12-26 14:38:35

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித மாசற்ற குழந்தைகள்


டிச.26,2012. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ' ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது (2:16-18)
மத்தேயு நற்செய்தி பிரிவு 2, 16 முதல் 18 வரையுள்ள இறை வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன. எருசலேமிலிருந்த மன்னன் ஏரோது அரண்மனைக்கு மூன்று கீழ்த்திசை ஞானிகள் சென்று, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் தனது அரியணைக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதாகக் கலங்கினான். ஆயினும் அவன் அந்த ஞானிகளிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். எனினும் ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள். அந்த ஞானிகள் தன்னிடம் திரும்பி வராததால் ஏரோது கோபமடைந்தான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். ஏரோதின் இந்தத் தீய அணுகுமுறையால் பல நிரபராதிக் குழந்தைகள் பலியானார்கள்.
அச்சமயத்தில் ஏராது அரசன் 14 ஆயிரம் சிறுவர்களைக் கொன்றான் எனக் கிரேக்க திருவழிபாடு கூறுகிறது. ஆனால், சிரியா நாட்டினரின் நம்பிக்கையின்படி இவ்வாறு கொல்லப்பட்ட சிறுவர்கள் 64 ஆயிரம் எனவும், மத்தியகால எழுத்தாளர்களின் கூற்றுப்படி இவ்வாறு கொல்லப்பட்ட சிறுவர்கள் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் எனவும் சொல்லப்படுகின்றது. இருந்தபோதிலும், நவீன எழுத்தாளர்கள் இந்த எண்ணிக்கையைக் குறைத்தே சொல்கின்றனர். பெத்லகேம் ஏறக்குறைய ஆயிரம் பேரைக் கொண்ட சிறிய நகரம்தான். அதனால் அச்சமயத்தில் ஏறக்குறைய இருபது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர். எனினும் ஒரு குற்றமும் செய்யாதக் குழந்தைகளைக் கொலை செய்தது சகித்துக்கொள்ள முடியாதப் படுபாதகச் செயல். இருந்தபோதிலும் கடவுள் ஏரோதின் இந்தத் தீய அணுகுமுறையை நன்கு பயன்படுத்தி, இயேசு பிறப்பிலேயே தம் மக்களின் வரலாற்றோடு ஒன்றிணையச் செய்து விட்டார். இங்கு ஒருவரின் சகிப்பற்றதன்மை பிறரைச் சவாலாகச் சந்திக்க உதவுகின்றது. ஏரோது இயேசுவை தனது அரச அரியணைக்கு அச்சுறுத்தலாகப் பார்த்தான். அதனால் இயேசு அந்தப் பகுதியில் பிறந்து அங்கு இருந்த அவரின் பிரசன்ன ஒளியில் தனது இருள்வாழ்வைக் களைவதற்கு மறுத்துவிட்டான். அவன் தனது அதிகார மோகமெனும் புதைகுழியில் அமுங்கிப் போனான். அதனால் அவனது வாழ்வின் இறுதி முடிவும் பயங்கரமானதாக இருந்தது.
எனவே, எப்பொழுது ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தோடு நல்லுறவில் வாழ்கிறாரோ அப்போதுதான் அவர் உண்மையான சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அனுபவிக்க முடியும். இந்த மாதிரி வாழாதவர்கள் பிறர்மேல் சந்தேகத்தோடே வாழ்வார்கள். வலுவுள்ளவை பிழைக்கும் என்பது வழக்கு. மனிதர் தனது வாழ்வில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் பலவீனமடைகின்றார். மழலைப் பருவமும் முதுமைப் பருவமும் அதிகமாகப் பிறரைச் சார்ந்து வாழும் பருவங்கள். இப்பருவங்களில் வாழ்வோர், குறிப்பாக முதியோர் பலர் உதவாக்கரையாக நோக்கப்படுகின்றனர். இதனால் பலவிதமானப் புறக்கணிப்புகளுக்கும் பிறரது கோபதாபங்களுக்கும் சுடுசொற்களுக்கும் உள்ளாகின்றனர். பாரச்சுமையால் தவிப்போருக்குப் பாசப் பகிர்வுகளாக நாம் வாழ்வோம். இன்று உலகில் இலட்சக்கணக்கான சிறார்கள் பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். குழந்தைத் தொழிலாளர்கள், அகதிச் சிறார், மனித வியாபாரத்துக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உட்படும் சிறார், போரில் பயன்படுத்தப்படுவோர் எனப் பலவழிகளில் துன்புறுகின்றனர். இந்த மாசற்ற குழந்தைகள் விழா அவர்களுக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுதரட்டும்.
ஒரு மனிதரின் குணநலனே அவரது இழக்க முடியாத உடமையாகும். பாலன் இயேசுவைக் கொலை செய்யும் நடவடிக்கையில் உயிரிழந்த அந்த மறைசாட்சிப் குழந்தைகள் விழா டிசம்பர் 28, இந்த வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.