2012-12-25 13:11:16

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இரவுத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


டிச.24,2012. இன்று மரியாவும் யோசேப்பும் நம் இல்லத்தின் கதவைத் தட்டினால் நாம் என்ன செய்வோம்? என்ற கேள்வியுடன் கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் மறையுரையை ஆரம்பித்தார்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இரவுத் திருப்பலியை 24ம் தேதி திங்கள்கிழமை, இரவு 10 மணிக்கு உரோம் நகர் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் துவக்கியத் திருத்தந்தை, தன் மறையுரையில், இன்றைய உலகில் வீடற்றவர், புலம்பெயர்ந்தோர் ஆகியோர் மீது நாம் கொள்ளும் அக்கறை குறித்து கேள்விகள் எழுப்பினார்.
இறைமகனுக்கு இடம் மறுக்கும் மனித சமுதாயத்தின் மன நிலையை யோவான் நற்செய்தியில், “அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1: 11) என்ற துவக்க வரிகள் விளக்குகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
செயலாற்றலும், வேகமும் கொண்ட பல கருவிகளின் உதவியுடன் வாழும் நாம், இன்னும் அதிகம் அதிகமாக நேரமில்லாமல் துன்புறுகிறோம் என்றும், இத்தகைய அவசர கதியில் வாழும் நாம், இறைவனுக்கு நேரமும் இடமும் ஒதுக்க மறுக்கிறோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
"உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று விண்ணவர் எழுப்பிய பாடலைப்பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் மேற்கொள்வதற்குப் பதில், கண்ணையும், கருத்தையும் கவரும் அக்காட்சியில், அந்த இசையில் நாம் மெய்மறந்து இருப்பதே மேலானது என்று திருத்தந்தை கூறினார்.
நாமும் பெத்லகேம் செல்வோம் என்று நம்மை இன்றைய வழிபாடு அழைக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வழைப்பானது, நமது பழைய நிலையிலிருந்து புதிய வாழ்வுக்குச் செல்ல நமக்கு விடுக்கப்படும் அழைப்பு என்பதையும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.