2012-12-22 15:38:12

திருப்பீடம் : பொருளாதார விவகாரங்களை நிர்வகிப்பதற்கு வெளிப்படையான வழிமுறைகளும் விதிமுறைகளும் தேவை


டிச.22,2012. திருப்பீடம், தனது பொருளாதார வளங்களை நிர்வகிப்பதற்கு வெளிப்படையான வழிமுறைகளை வளர்ப்பதற்கு கொண்டுள்ள ஆர்வத்தை மீண்டும் உறுதி செய்வதாகத் தெரிவித்தார் திருப்பீடத்தின் பொருளாதார விவகாரங்கள் துறைத் தலைவர் கர்தினால் ஜூசப்பே வெர்சால்தி.
எனினும், திருப்பீடம் இந்தத் தனது இலக்கை அடைவதற்குப் புதிய விதிமுறைகள் தேவை என்றுரைத்த கர்தினால் வெர்சால்தி, திருப்பீடத்தின் நிர்வாக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட கர்தினால்களின் சிறப்பு அவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தப் புதிய விதிமுறைகள் அமைந்திருக்கும் என்று கூறினார்.
இவ்வாண்டில் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் அடிப்படையில் திருப்பீட நிர்வாகம் செயல்படுவது குறித்து நிருபர் கூட்டத்தில் விளக்கிய கர்தினால் வெர்சால்தி இவ்வாறு தெரிவித்தார்.
மக்களை நம்பாததால் அல்ல, மாறாக, மிகச் சிறந்த மனிதரும் சோதனைக்கு உள்ளாகக் கூடும் என்பதால் பொருளாதார நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய வழிமுறைகள் தேவைப்படுகின்றன, இதுவே இந்தப் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டதற்குக் காரணம் எனவும் விளக்கினார் கர்தினால் ஜூசப்பே வெர்சால்தி.
மேலும், திருப்பீடத்தின் வரவு செலவுகள் இன்னும் இழப்பிலே போய்க் கொண்டிருக்கின்றது, இதற்கு உலகளாவியப் பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம் என்று, திருப்பீடத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர்
பேரருட்திரு Lucio Balda இந்நிருபர் கூட்டத்தில் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.