2012-12-22 15:35:31

Paolo Gabrieleவுக்குத் திருத்தந்தை மன்னிப்பு


டிச.22,2012. உணவு பரிமாறுதல் உட்பட தனக்குத் தனிப்பட்ட உதவிகளைச் செய்துவந்த தனது முன்னாள் உதவியாளர் Paolo Gabrieleஐ இச்சனிக்கிழமையன்று சிறையில் சந்தித்து மன்னிப்பு அளித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்தின் இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த அக்டோபர் 6ம் தேதி 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வத்திக்கான் காவல்துறை தலைமையகத்தில் சிறையிலிருந்த Paolo Gabrieleடன் ஏறக்குறைய 15 நிமிடங்கள் பேசிய பின்னர் அவருக்கு மன்னிப்பு அளித்து, அவருடைய குடும்பத்துடன் வாழ்வதற்கு அனுமதியளித்துள்ளார் திருத்தந்தை.
பல ஆண்டுகள் தனது தினசரி வாழ்வைப் பகிர்ந்து கொண்ட ஒருவரிடம் திருத்தந்தை காட்டிய தந்தைக்குரிய அடையாளமாக இந்த மன்னிப்பு நடவடிக்கை இருக்கின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் இது ஒரு மகிழ்ச்சியான முடிவாக இருக்கின்றது என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
மேலும், இதே குற்றத்தில் Paolo Gabrieleவுக்கு உதவி செய்தார் என்ற குற்றம் சாட்டப்பட்டிருந்த Claudio Sciarpellettiவுக்கும் திருத்தந்தை மன்னிப்பு அளித்துள்ளார் என அறிவித்தார் அருள்தந்தை லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.