2012-12-21 15:09:09

கிறிஸ்மஸ் காலத்தில் மது அருந்துவோர் குறித்து கேரள ஆயர்கள் கவலை


டிச.21,2012. கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கிவரும்வேளை, கேரளாவில் இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் மதுபானம் அருந்துவோர் குறித்த கவலையை வெளியிட்டுள்ளனர் கேரள ஆயர்கள்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் காலங்களில் மதுபானங்கள் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதாலும், சந்தைகளில் விற்கப்படும் மதுபானங்களின் அளவைக் கண்டுபிடிப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லாததாலும் இவற்றை அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகக்கூடும் என்று கேரள ஆயர்கள் பேரவையின் மதுபானங்கள் ஒழிப்பு ஆணையம் கூறியுள்ளது.
மதுபானங்கள் விற்பனை மற்றும் அவற்றை அருந்துவோர் குறித்த 27 வழிகாட்டிக் குறிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவை வருகிற சனவரியிலிருந்து அமலுக்கு வரும் எனவும் மதுபானங்கள் ஒழிப்பு ஆணையத்தின் செயலர் அருட்பணி டி.ஜே.அந்தோணி கூறினார்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் காலங்களில் விற்கப்படும் மதுபானங்கள் அதிகம் வீரியம் உள்ளவை எனவும், போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஆயர்களின் இந்த ஆணையம் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் அவ்வாணையச் செயலர் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.