2012-12-20 15:39:23

ஜப்பான் ஆயர்கள் பேரவைத் தலைவர் : ஆசியர்களின் நலமான வாழ்வுக்குத் திருஅவையின் தலைவர்கள் பொறுப்பு


டிச.20,2012. ஆசிய மக்களின் முன்னேற்றத்திற்கும் நலமான வாழ்வுக்கும் திருஅவையின் தலைவர்கள் பொறுப்பு என்றும், இந்த முன்னேற்றம் நன்னெறி மற்றும் ஆன்மீகத்துடன் இணைந்தது என்றும் ஜப்பான் ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் Leo Jun Ikenaga கூறினார்.
வியட்நாமில் அண்மையில் நடைபெற்ற ஆசிய ஆயர்கள் பத்தாவது கூட்டத்தில், நாகசாகி பேராயர் Takami Mitsuaki அவர்களால் வாசிக்கப்பட்ட இவ்வுரையில், பேராயர் Ikenaga, 2011ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, மற்றும் அணுஉலைக் கசிவு ஆகிய நிகழ்வுகளை மையப்படுத்தியுள்ளார்.
இயற்கைப் பேரிடர்கள் ஒவ்வொரு முறையும் நிகழும்போது, அதனுடன் தொடர்புள்ள மனித முன்னேற்ற முயற்சிகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன என்று பேராயர் தன் உரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக நாடுகளிடையே வளர்ந்துள்ள பொருளாதாரப் போட்டிகளால், அத்துமீறிய வழிகளில் இயற்கையைச் சீரழிக்கும் வழிகளில் மனித குலம் ஈடுபடுவது ஆபத்தான ஒரு போக்கு என்பதையும் பேராயரின் உரை வலியுறுத்தியது.
உலகமயமாக்கல், இளையோரிடையிலும், முதியோரிடையிலும் அதிகரித்து வரும் தற்கொலைகள், இயற்கையும் பிற உயிரினங்களும் அழிதல் என்ற பல கருத்துக்களையும் தன உரையில் குறிப்பிட்டார் இயேசு சபையைச் சேர்ந்த பேராயர் Ikenaga.








All the contents on this site are copyrighted ©.