2012-12-20 15:33:37

இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் வணக்கத்துக்குரியவர் என அறிவிக்கப்பட்டுள்ளார்


டிச.20,2012. புனிதர்பட்ட நிலைக்கு உயர்த்துவதற்குத் தேவையான விபரங்கள் அடங்கிய, முத்திப்பெற்றவர்கள், வணக்கத்துக்குரியவர்கள், இறையடியார்கள், மறைசாட்சிகள் என 30க்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்புகளை இவ்வியாழனன்று ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.
இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் உட்பட 10 இறையடியார்களின் வீரத்துவமான பண்புகள் அடங்கிய தொகுப்புக்களையும், ஐந்து முத்திப்பெற்றவர்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளையும், இத்தாலியின் Otrantoவில் 1480ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட முத்திப்பெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த தோழர்கள், இன்னும், கொலம்பியாவின் முத்திப்பெற்ற Laura di Santa Caterina, மெக்சிகோவின் முத்திப்பெற்ற Maria Guadalupe ஆகியோரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளையும் ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.
இன்னும், குரோவேஷியாவில் 1947ல் கொல்லப்பட்ட அருட்பணி Miroslav Bulešić, இஸ்பெயினில் 1936 மற்றும் 1937ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்ட பல மறைசாட்சிகளின் வாழ்க்கை விபரங்களையும் ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.
Giovanni Battista Montini என்ற இயற்பெயரைக் கொண்ட இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல், இத்தாலியின் Concesioவில் 1897ம் ஆண்டு பிறந்தவர். 1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இரண்டாவது பகுதியைத் தொடங்கி வைத்தார். 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இறந்த இவர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை நிறைவு செய்தவர். இவரின் வீரத்துவமான பண்புகள் அடங்கிய அறிக்கையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கையெழுத்திட்டுள்ளதன்மூலம் அவர் வணக்கத்துக்குரியவர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருஅவையில் மறைசாட்சி தவிர மற்றவர்கள் முத்திப்பெற்றவர் என அறிவிக்கப்படுவதற்கு அவர் பெயரால் குறைந்தது ஒரு புதுமை இடம் பெற்றிருக்க வேண்டும். புனிதர் என அறிவிக்கப்படுவதற்கு அந்த நபரின் பரிந்துரையால் மேலும் ஒரு புதுமை இடம் பெற்றிருக்க வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.