2012-12-19 15:41:52

அகில உலக புலம்பெயர்ந்தோர் நாளையொட்டி ஐ.நா. வெளியிட்ட அறிக்கை


டிச.19,2012. நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்தோரின் அயரா உழைப்பால், உலகச் சமுதாயம் பல வழிகளிலும் முன்னேறியுள்ள அதே வேளையில், புலம்பெயர்ந்தோரின் வாழ்வு அதிக முன்னேற்றம் இன்றி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
டிசம்பர் 18, இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அகில உலக புலம்பெயர்ந்தோர் நாளையொட்டி ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், புலம்பெயர்ந்தோரின் இன்றைய நிலையும், இப்பிரச்சனைக்கானத் தீர்வுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
தகுந்த ஆவணங்கள் இன்றி, எல்லை கடந்து அடுத்த நாட்டுக்குச் செல்வதும், அங்கே தங்குவதும் ஒரு குற்றம் என்று நோக்கப்படுவது சரியல்ல, அதிகப்படியாக அது அரசுகள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைதான் என்று ஐ.நா. உயர் அதிகாரிகள் François Crépeau மற்றும் Abdelhamid El Jamri ஆகியோர் கூறினர்.
ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2000மாம் ஆண்டு 15 கோடி என்ற அளவில் இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து, தற்போது 21 கோடியே 40 இலட்சம் என்ற அளவில் உள்ளது.
புலம்பெயர்தல் என்பது, மனித சமுதாயத்தில் தொடரும் வரலாற்று நிகழ்வாக இருப்பதால், 2000மாம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியை, அகில உலக புலம்பெயர்ந்தோரின் நாளென்று ஐ.நா. உருவாக்கியது.








All the contents on this site are copyrighted ©.