2012-12-18 14:44:12

விவிலியத் தேடல் திருப்பாடல்கள்... இறுதி எண்ணங்கள்


RealAudioMP3 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி விவிலியத்தேடல் நிகழ்ச்சியில் பயன்தரும் ஒரு பயணத்தை நாம் ஆரம்பித்தோம். அப்பயணம் இன்றைய விவிலியத்தேடலுடன் நிறைவடைகிறது. ஆம், அன்பர்களே, கடந்த 32 மாதங்களாக, 130 வாரங்களுக்கும் மேலாக, நாம் விவிலியத்தின் ஒரு முக்கிய நூலான, திருப்பாடல்கள் என்ற நூலில் இப்பயணத்தை மேற்கொண்டோம்.
அருள்சகோதரி தெரேசாவும், அருள்பணியாளர் வின்சென்ட் டோமினிக்கும் திருப்பாடல்கள் தேடலில் என்னுடன் இணைந்து சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டனர். 32 மாதங்களாகத் தொடர்ந்துள்ள இந்த நிறைவான பயணத்தின் இறுதிக் கட்டத்தில், நாம் இந்நூலின் பெருமைகளை மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்ள முயல்வோம்.

விவிலியத்தின் அனைத்து நூல்களுடனும் ஒப்பிட்டால், திருப்பாடல்கள் நூல்தான் நீண்டதொரு நூல். 150 பாடல்கள் அடங்கிய இந்நூல், விவிலியத்திலேயே நீளமான நூல் மட்டுமல்ல, மிக அதிகமாக, மிகப் பல சூழ்நிலைகளில் நாம் பயன்படுத்தும் ஒரு நூலும் இதுவே. இந்நூல்... அள்ள, அள்ளக் குறையாத ஓர் அமுதசுரபி. பட்டை தீட்டப்பட்ட ஒரு வைரம், உலகம் என்ற உடலை இயக்கும் உயிர் மூச்சு... உங்களுக்குத் தெரிந்த பல்வேறு அடைமொழிகளில் இந்நூலை வர்ணிக்கலாம். அனைத்தும் இந்நூலுக்குப் பொருந்தும்.

நமது தனிப்பட்ட வாழ்வின் பல நிகழ்வுகளில், பல்வேறு மன நிலைகளில் இந்நூலைப் பயன்படுத்தியிருக்கிறோம். பலனும் பெற்றிருக்கிறோம். திருப்பாடல்களின் வரிகளைத் தனியே தியானித்திருக்கிறோம். அதே போல், நமது இல்ல வைபவங்களில், குழு செபங்களில், திருவழிபாடுகளில் நாம் திருப்பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். எனவே இது அள்ள, அள்ளக் குறையாத ஓர் அமுதசுரபி.
ஒவ்வொரு முறையும் ஒரு திருப்பாடலைப் பயன்படுத்துகிறோம். அடுத்த முறை அதேத் திருப்பாடலை வேறொரு நாள் படிக்கும்போது, அன்றையச் சூழ்நிலைக்குத் தகுந்ததுபோல் அத்திருப்பாடல் வேறுபட்ட ஒரு பொருளை நமக்குத் தருவதையும் உணர்ந்திருக்கிறோம். எனவே, இந்நூல் பலவித ஒளியில் மின்னும் ஒரு வைரம்.

வருடத்தின் 365 நாட்களில் குறைந்தது 300 நாட்களாகிலும் திருப்பலியில் பதிலுரைப் பாடலாக திருப்பாடல்கள் இடம் பெறுகின்றன. ஒரு நாளின் 24 மணி நேரங்களில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு திருப்பலி நிகழ்ந்த வண்ணம் இருக்கும்... அங்கு திருப்பாடல்கள் ஒலிக்கும். இதுமட்டுமன்றி, பல துறவு மடங்களில், குரு மடங்களில், தினமும் காலை, மதியம், மாலைச் செபங்களில் திருப்பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரு நிகழ்வுகளை மட்டும் வைத்துப் பார்க்கும்போது, உலகம் என்ற கோளத்திலிருந்து பாடல்களாக, வாசகமாக, செபமாக திருப்பாடல்கள் என்ற நூலின் பல பகுதிகள் 24 மணி நேரமும் 365 நாட்களும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இவையல்லாமல், இல்ல வைபவங்களில், செபக் கூட்டங்களில், நோயுற்றோர் படுக்கையருகில் என்று பலச் சூழல்களிலும் இந்த நூலின் பல பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தத்தில், இந்த உலகத்தை ஒரு மனித உடலாகக் கற்பனை செய்தால், அந்த உடல் இடைவிடாமல் உள்வாங்கி வெளிவிடும் மூச்சைப்போல் திருப்பாடல்கள் பயன்படுவதைப் புரிந்துகொள்ளலாம்.

அமுதசுரபி, வைரம், நமது மூச்சு... என பல உருவகங்களில் நாம் சிந்திக்கும் இந்நூல் இவ்வளவு புகழ்பெற காரணம் என்ன? இந்நூலில் அறிவுசார்ந்த பெரும் தத்துவங்கள் இல்லை, இது ஒரு வரலாற்று நூல் இல்லை. இந்நூல் தருவதெல்லாம் செபங்களும், கவிதைகளும். நம் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் காணக் கிடக்கும் பல உண்மைகளை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, மகிழ்ச்சிகளை, துக்கங்களை எடுத்துக்கூறும் எளிய நூல்.

இந்நூலைக் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்ட Corey Keating, Tom Parker, Eugene Peterson என்ற பேராசிரியர்கள் கூறும் எண்ணங்கள் இந்நூலை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும்.
"இறைவனைப் பற்றிப் பேசுவது, நம்மத்தியில் பெரும்பாலும் காணப்படும் ஒரு பழக்கம். ஆனால் இறைவனிடம் பேசுவது அரிதான பழக்கம். இறைவனைப் பற்றி விவாதங்கள் செய்வது எளிது. திருப்பாடல்கள் நூல் இந்தப் பழக்கத்தை மாற்றும் ஒரு நூல். இறைவனைப் பற்றி விவாதங்கள் செய்வதற்குப் பதில், இறைவனிடமே விவாதங்கள் செய்ய, அதுவும் மனம் திறந்து விவாதங்கள் செய்ய நமக்குச் சொல்லித் தருவது, திருப்பாடல்கள் நூல்" என்று Eugene Peterson கூறியுள்ளார்.

இறைவனுடன் மனம் திறந்து உரையாட, உறவாட இந்நூலை நாம் பயன்படுத்தும்போது, வாழ்வின் பலச் சூழல்களுக்கு நாம் பொருள் காணமுடியும். நாம் இந்நூலை எவ்விதம் பயன்படுத்தமுடியும் என்பதற்கு, இயேசுவின் வாழ்வே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பள்ளிக்குச் சென்று பல நூல்களை இயேசு படித்தாரா என்பதெல்லாம் நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால், திருப்பாடல்களை அவர் அடிக்கடி வாழ்வில் பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஏறக்குறைய அனைத்துத் திருப்பாடல்களும் அவரது நினைவில் பதிந்திருக்க வேண்டும். இப்படி நான் சொல்வதற்கு ஒரு முக்கியக் காரணம் கல்வாரிக் காட்சி.

வாழ்வில் நாம், மனதிலோ, உடலிலோ அடிபடும்போது, வாய்விட்டுச் சொல்லும் முதல் வார்த்தைகளைச் சிந்திக்கலாம். நம்மில் பலர் அந்நேரத்தில், 'அம்மா' என்றோ, 'கடவுளே' என்றோ, 'இயேசுவே' என்றோ சொல்கிறோம். எவ்விதச் சிந்தனையும் இல்லாமல், எதேச்சையாக வரும் சொற்கள் இவை. ஏன் இதைச் சொன்னோம் என்று யாராவது கேட்டால், நம்மால் விளக்கங்கள் சொல்லமுடியாது. அவ்வளவு தூரம் நமக்குள் ஊறிப்போய்விட்டச் சொற்கள் இவை.
இயேசு கல்வாரியில், அந்தத் துன்பத்தின் உச்சியில், சிலுவையில் சொன்னதாகக் கூறப்படும் ஏழு வாக்கியங்களில் இரண்டு திருப்பாடல்கள் நூலில் காணக் கிடக்கும் வாக்கியங்கள். இயேசுவின் உள்ளத்தை திருப்பாடல்கள் நூலின் வரிகள் நிறைத்திருந்ததால் அவரிடமிருந்து இயல்பாகவே அந்த வார்த்தைகள் வெளிவந்தன. என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்ற இயேசுவின் வார்த்தைகள் 22ம் திருப்பாடலில் காணப்படும் வார்த்தைகள். அதேபோல், தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று இயேசு கூறிய இறுதி வார்த்தைகள் 31ம் திருப்பாடலில் காணப்படும் வார்த்தைகள். இயேசு சிலுவையில் தொங்கிய அந்த நேரம் முழுவதும் திருப்பாடல்களையே செபித்துவந்தார் என்று ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்வர். சிலுவையில் மட்டுமல்ல, இயேசு தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும், பல்வேறு சூழல்களில் திருப்பாடல்களைப் பயன்படுத்தி, தந்தை இறைவனுடன் தன் உறவை வளர்த்துக் கொண்டார் என்று உறுதியாக நம்பலாம்.

வாழ்வில் திருப்பாடல்களை நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு சிலச் சூழல்களைப் புனித பவுல், புனித யாக்கோபு ஆகியோர் தங்கள் திருமுகங்களில் கூறியுள்ளனர்:

புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 5: 19
உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.

புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3: 16
முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.

யாக்கோபு (யாகப்பர்) எழுதிய திருமுகம் 5: 13
உங்களுள் யாரேனும் துன்புற்றால், இறைவேண்டல் செய்யட்டும்: மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்.

நாம் கேட்ட இப்பகுதிகளில் திருப்பாடல்களை எவ்வகைகளில் பயன்படுத்தலாம் என்பதை உணரலாம்.


உண்மையான, ஆழமான உறவு கொண்டவர்களுடன் பேசும்போது, அங்கு கோபம், மகிழ்வு, ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்று பல உணர்வுகள் வெளிப்படும். இவ்வுணர்வுகளை வெளிப்படுத்துவதில் அளவு பார்த்து பேசவேண்டும் என்ற கணக்கு பார்ப்பதில்லை. இந்த உணர்வுகள் எல்லாவற்றையும் திருப்பாடல்களில் நாம் காணலாம். இறைவனிடம் நாம் எழுப்பும் செபங்களை ஆய்வு செய்தால், முக்கியமாக, நமது பொதுவான குழுச் செபங்களை ஆய்வுசெய்தால், அவற்றில், நாம் அழகான வார்த்தைகளை, எண்ணங்களையே பயன்படுத்த விரும்புகிறோம்.
திருப்பாடல்கள் இதற்கு நேர்மாறான ஒரு பாடத்தை நமக்குச் சொல்லித் தருகின்றன. மகிழ்வானாலும், மன வேதனையானாலும், கோபமானாலும் பாசமானாலும், கடவுளிடமே அனைத்தையும் கூறும் ஒரு சமுதாயத்தின் செப நூல் திருப்பாடல்கள் நூல். இந்த நூலில் நாம் மேற்கொண்ட பயணம் இன்று முடிவுற்றாலும், இந்நூல் நம் அனைவரின் வாழ்வையும் வழிநடத்தும் செப நூலாக நிலைக்கும் என்ற நம்பிக்கையுடன் நமது 32 மாதப் பயணத்தை நிறைவு செய்வோம்.








All the contents on this site are copyrighted ©.