2012-12-18 14:44:05

திருவருகைக்காலச் சிந்தனை – வழங்குபவர் அருள்பணி. இயேசு கருணா


RealAudioMP3 இயேசுவின் பிறப்பு வானகத் தந்தை நமக்களித்த கொடை. அவர் மகிழ்ந்து தந்த பரிசு. தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்த தேர்ந்துகொண்ட ஆயுதம், ‘இலவசம்.’ இந்த வார்த்தை பிடிக்காதவர்கள் ‘விலையில்லா’ என அழைக்கின்றனர். ஆனால் அர்த்தம் ஒன்றுதான். இலவச அரிசி, இலவச வேஷ்டி சேலை, இலவச டிவி, இலவச மின்சாரம் எனத் தொடங்கி விலையில்லா ஆடு, விலையில்லா மடிக்கணிணி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், என வளர்ந்துள்ளது. இயேசுவின் பிறப்பு இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட ‘இலவசம்’அல்ல. அல்லது வியாபார நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவோ, அல்லது தங்கள் பொருள்களை விற்றுத் தீர்க்கவோ அறிவிக்கும் ‘தள்ளுபடி’வியாபாரம் அல்ல. மாறாக, எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பினால் உருவான கொடையே கிறிஸ்து. இந்த அன்பின் பரிசு நமக்குச் சொல்லும் பாடம் நம் வாழ்வின் பரிசுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான். நம் பிறந்தநாளுக்கோ, திருமண நிகழ்விற்கோ நமக்கு மற்றவர்கள் பரிசுகள் தருவார்கள். பரிசுகள் பெரும்பாலும் வண்ணக் காகிதங்களில் வடிவாகப் பொதிந்திருக்கும். பரிசுகளை வாங்கியவுடன் காகிதத்தைப் பிரித்து எறிந்துவிட்டு பரிசுகளை நாம் பத்திரப்படுத்துவோம். நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களுமே இறைவன் நமக்கு அருளும் பரிசுகள் தாம். ஆனால் மனிதர்களை நாம் பார்ப்பது எப்படியிருக்கிறது என்றால் - காகிதங்களை வைத்துக்கொண்டு பரிசுகளை எறிந்துவிடுகிறோம். இவர் யார்? இவர் பின்புலம் என்ன? இவர் சொத்து எவ்வளவு? இவர் எந்த ஊர்? என காகிதங்களை ஆராய்ந்துகொண்டே பரிசை இரசிக்க மறுத்துவிடுகின்றோம். கிறிஸ்து கொடையாக வந்தார். அனைவரையுமே கொடையாகப் பார்த்தார். பரிசுகளைப் பார்த்து இரசிக்கத் தொடங்கினால் காகிதங்களை ஆராய நேரம் இல்லாமற் போய்விடும்!







All the contents on this site are copyrighted ©.