2012-12-18 15:18:07

கர்தினால் Sandri : ஈராக்கில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படுவதற்கு கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்


டிச.18,2012. ஈராக்கில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படுவதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் கீழைரீதிப் பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri.
ஈராக்கின் கிர்குக்கிலுள்ள மிகப் பெரிய மசூதிக்கு கர்தினால் Sandri சென்றதை வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அந்நாட்டின் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நோக்கும்வேளை, இவ்விரு மதத்தவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டி எழுப்புமாறு வலியுறுத்தினார் அவர்.
அமைதியின்றி எந்த ஒரு கலாச்சாரமும் முன்னேற்றமும் இடம்பெறாது என்பதால், அமைதி என்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுக் கொண்டார் கீழைரீதிப் பேராயத் தலைவர் கர்தினால் Sandri.
மேலும், இச்சனிக்கிழமையன்று கிர்குக் நகர் ஆளுனர் Najm Alddin Karimஐச் சந்தித்த கர்தினால் Sandri, கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி அரசு விடுமுறையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பதையும் உறுதி செய்தார் என ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.